தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களின் மனநலனை உறுதிசெய்யும் புரிந்துணர்வுக் குறிப்பு

2 mins read
6e7e21f3-16c3-4e1c-88b0-2fd93ffec5e9
புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திடும் இரு அமைப்புகளின் பேராளர்கள். - படம்: சாவ் பாவ்

வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களின் மனநலனுக்கான ஆதரவை மேம்படுத்தும் ஒத்துழைப்பை முறைப்படுத்தும் விதமாக வெளிநாட்டு இல்ல ஊழியர்களுக்கான நிலையமும் (Centre for Domestic Employees) சில்வர் ரிப்பன் அமைப்பும் புரிந்துணர்வுக் குறிப்பு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.

அனைத்துலக வெளிநாட்டு ஊழியர்கள் தினத்தை முன்னிட்டு ஏறத்தாழ 1,000 வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் பங்கேற்ற ‘எம்பவர் மீ’ (Empower Me) எனும் நிகழ்வில் இப்புரிந்துணர்வுக் குறிப்பு கையெழுத்தானது.

ரிசோர்ட்ஸ் வோர்ல்டு மாநாட்டு நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 8) நடைபெற்ற அந்த நிகழ்வில் கல்வி மற்றும் மனிதவளத் துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங், தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் தலைவர் கே. தனலெட்சுமி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

“வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களுக்கான இத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்படுவது மனநிறைவாக உள்ளது. யோகா, மூத்தோருக்கான பராமரிப்புப் பயிலரங்கு, தோட்டக்கலை உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது சிறப்பானது. தொடர்ந்து இல்லப் பணிப்பெண்களுக்கு நேரடி மனநல ஆதரவை வழங்க வகைசெய்யும் புரிந்துணர்வுக் குறிப்பு, தாய்நாட்டைவிட்டு இங்கு வந்து பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆதரவாக இருக்கும்,” என்று சொன்னார் துணை அமைச்சர் கான்.

உலகச் சுகாதார அமைப்பின் மனநலச் செயல்திட்டம் சமூக ஒற்றுமையை மேம்படுத்த நோக்கம் கொண்டுள்ளது. அதுபோலவே, இந்த ஒத்துழைப்பும் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களுக்கு மனநலனின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் எதிர்நோக்கும் சிரமங்களை வெளிப்படுத்தும் வாய்ப்புகளை வழங்கும் என்றும் சொன்னார் சில்வர் ரிப்பன் அமைப்பின் நிர்வாக இயக்குநர் போர்ஷ போ.

இந்நிகழ்வில், ஊழியர்களுக்கு உதவ பெரும் பங்களித்துவரும் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களுக்கான சமூகநல நிதியைப் பாராட்டும் விதமாக விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. இதனை தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் தலைவர் கே. தனலெட்சுமி பெற்றுக்கொண்டார்.

வெளிநாட்டு இல்லப் பணிப்பெண் ‌ஷோபா பீட்டர்.
வெளிநாட்டு இல்லப் பணிப்பெண் ‌ஷோபா பீட்டர். - படம்: சாவ் பாவ்

“வெளிநாட்டு இல்ல ஊழியர்களுக்கான நிலையம், பணிப்பெண்களுக்குப் பல்வேறு ஆதரவுகளை வழங்கி வருகிறது. அண்மையில் மூத்தோர் கவனிப்பு குறித்த பயிலரங்கில் பங்கேற்றேன். அதில், பல்வேறு குறிப்புகள் பகிரப்பட்டன,” என்றார் 16 ஆண்டுகளாக இல்லப் பணிப்பெண்ணாகப் பணியாற்றிவரும் ஷோபா பீட்டர்.

“ஊர் விட்டு ஊர் வந்து இங்கு வாழும் பணிப்பெண்கள் மனஅழுத்தத்தை எதிர்நோக்கக்கூடும். சிறு சிறு சிரமங்களை எதிர்கொள்வதிலும் சிக்கல் இருக்கும். குறிப்பாக, புதிதாகப் பணிக்கு வருவோர்க்கு அது அதிகமாக இருக்கும். அதனை எதிர்கொள்ள உதவும் இந்தத் திட்டங்கள் வரவேற்கத்தக்கவை,” என்றார் அவர்.

இந்த நிகழ்வில் பங்கேற்ற பணிப்பெண்கள் 800 பேருக்கு ‘சீ அக்குவேரியம்’ செல்வதற்கான நுழைவுச்சீட்டுகள் வழங்கப்பட்டன. மேலும், பல்வேறு கலாசார நடனங்கள், உணவு, கலை, அதி‌ர்ஷ்டக் குலுக்கல் ஆகியவற்றுடன் இந்நிகழ்ச்சி களைகட்டியது.

குறிப்புச் சொற்கள்