வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்க சிங்கப்பூரர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் இலக்குடன் வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) தொடக்கம் கண்டுள்ளது சமூக மேம்பாட்டு மன்ற (சிடிசி) பற்றுச்சீட்டுகள் திட்டம் 2026.
இத்திட்டத்தின்கீழ் சிங்கப்பூர்க் குடும்பங்களுக்கு $300 மதிப்பிலான சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்.
பொங்கோல் சமூக மன்றத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் துணைப் பிரதமரும், வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு கான், ‘‘கடந்த ஆண்டு எளிதானதாக இருக்கவில்லை, எனினும் நல்லவேளையாகத் தொழிலாளர்கள், வர்த்தகங்கள், தொழிற்சங்கங்கள், அரசாங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கூட்டு முயற்சியால், எதிர்பார்த்ததை விடச் சிறப்பாக நாடு முன்னேறியுள்ளது,’’ என்று குறிப்பிட்டார்.
நிதி அமைச்சு இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் தொடர்பில் பணியாற்றி வருவதாகவும் சிங்கப்பூரர்களுக்குக் கூடுதல் உதவி வழங்குவதற்கான வழிகளை அது ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய சூழலில் காத்திருக்கும் சவால்கள் குறித்துத் தெளிவாக இருப்பது அவசியம் என்ற அவர், ‘‘விநியோக அமைப்பு முறைகள் உலகளாவிய வகையில் மறுவடிவம் காண்கின்றன; வர்த்தகக் கொள்கைகள் மிகவும் பிளவுற்றதாக மாறிவருகின்றன. வணிகங்களின் இயக்கம், வேலை வாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றைத் தொழில்நுட்பம் குறிப்பாகச் செயற்கை நுண்ணறிவு மறு உருவாக்கம் செய்கின்றது,’’ என்றும் துணைப் பிரதமர் கூறினார்.
மாறிவரும் பொருளியல் சூழலில் செழிப்புற அரசாங்கம், வணிகங்கள், சமூகம் எனப் பல்வேறு தரப்பினரும் நீண்டகாலம் இணக்கமாகச் செயலாற்றுவது அவசியம் என்று திரு கான் கூறினார்.
2025ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தில் 800 வெள்ளி மதிப்பிலான ‘சிடிசி’ பற்றுச்சீட்டுகள் குறித்து அறிவிக்கப்பட்டது. அதில் $500 மதிப்பிலான பற்றுச்சீட்டுகள் கடந்த ஆண்டு மே மாதம் வழங்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள $300 மதிப்பிலான ‘சிடிசி‘ பற்றுச்சீட்டுகள் தற்போது வழங்கப்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
தென்மேற்கு வட்டார மேயர் லோ யென் லிங், வடகிழக்கு வட்டார மேயர் பே யாம் கெங், தென்கிழக்கு வட்டார மேயர் தினேஷ் வாசு தாஸ், மத்திய சிங்கப்பூர் வட்டார மேயர் டெனிஸ் புவா ஆகியோர் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
உணவு, மளிகைப் பொருள்கள் உள்பட சிங்கப்பூரர்களின் அன்றாட வாழ்க்கைச் செலவினங்களை இலகுவாக்குவதும் இத்திட்டத்தில் பங்கேற்கும் குடியிருப்பு வட்டார வணிகர்கள், உணவங்காடிக் கடைக்காரர்களை ஆதரிப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.
வழக்கம்போல $150 வெள்ளி மதிப்புள்ள ‘சிடிசி’ பற்றுச்சீட்டுகளைக் குடியிருப்பு வட்டார வணிகங்கள், உணவங்காடிகளிலும் எஞ்சியுள்ள $150 மதிப்புள்ள பற்றுச்சீட்டுகளைப் இத்திட்டத்தில் பங்கேற்கும் பேரங்காடிகளிலும் சிங்கப்பூரர்கள் பயன்படுத்தலாம்.
இணையம் வாயிலாகப் பற்றுச்சீட்டுகளைப் பெற விரும்புவோர், ஒரு குடும்பத்திலிருந்து ஒருவர் மட்டும் www.go.gov.sg/cdcv இணையத்தளத்தில் சிங்பாஸ் கணக்கைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
இதற்கிடையே, செலவினங்களிலிருந்து பாதுகாக்கும் நிரந்தர அங்கமாக ‘சிடிசி‘ பற்றுச்சீட்டுத் திட்டம் மாறக்கூடுமா? என்று தமிழ் முரசு எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த தென்கிழக்கு வட்டார மேயர் தினேஷ் வாசு தாஸ், ‘‘பொருளியல் பின்னடைவு நிலவினால் பற்றுச்சீட்டுகள் மீண்டும் வழங்கப்படலாம். ஆனால் அது சூழ்நிலைகளைப் பொறுத்தது,’’ என்றார்.
இத்திட்டத்தில் இணைந்துள்ள குடியிருப்பு வட்டார வணிகர்கள் பேரங்காடிகளுக்கு ஈடாகப் போட்டித்தன்மையுடன் திகழ முடிவதாக ஏதேனும் கருத்து கூறியுள்ளனரா என்று அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் மனிதவள துணை அமைச்சருமான தினேஷ், ‘‘இத்தகைய வணிகர்கள் பெரும்பாலும் சந்தைகளில் கடைவைத்து இருப்பார்கள். பொருள்கள் வாங்குவதற்கு கணிசமான இளையர்கள் பேரங்காடிகள், இணையத்தை நாடிச் செல்வதை நாம் பார்க்க இயல்கிறது. அவ்வகையில் இத்திட்டத்தில் இணைந்துள்ள வணிகர்கள் தங்கள் பொருள்களை, குறிப்பாக இறைச்சி, உணவு உள்ளிட்டவைகளை அதிகமானவர்களிடம் கொண்டுசேர்க்கவும் வியாபாரத்தில் நற்பலனை அடையவும் இத்திட்டம் அவர்களுக்குக் கைகொடுக்கிறது,’’ என்றார்.
‘சிடிசி’ பற்றுச்சீட்டுகளை குடும்பங்கள் இந்த ஆண்டிறுதி அதாவது 2026 டிசம்பர் 31ஆம் தேதி வரை பயன்படுத்தலாம்.

