தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிலிப்பீன்சில் நிலநடுக்கம்; 69 பேர் உயிரிழப்பு, 150 பேர் காயம்

2 mins read
034c13ab-3b8f-43cc-bba7-e800219d6352
செபு வட்டாரத்தின் சான் ரெமிகியோ நகரில் உள்ளரங்கு ஒன்றில் ஏற்பட்ட சேதத்தை புதன்கிழமை (அக்டோபர் 1) அதிகாரிகள் பார்வையிடுகின்றனர். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 3

செபு: பிலிப்பீன்சின் செபு வட்டாரத்தில் ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தால் 69 பேர் உயிரிழந்தனர்; 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

நாட்டின் பேரிடர் நிர்வாக மன்றம், புதன்கிழமை (அக்டோபர் 1) இதனைத் தெரிவித்தது.

நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.9ஆகப் பதிவானதாக பிலிப்பீன்ஸ் அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 30) இரவு பத்து மணிவாக்கில் செபு சிட்டி கரையருகே ஏற்பட்ட அந்த நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் சேதமடைந்ததுடன் மின்தடையும் ஏற்பட்டது.

பிலிப்பீன்சின் மத்திய பகுதியில் ஏறக்குறைய 22 கட்டடங்கள் பலத்த சேதமடைந்ததாகக் கூறப்பட்டது. நான்கு கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகவும் அரசாங்கக் கட்டடங்கள் மூன்று சேதமடைந்ததாகவும் ஆறு பாலங்களும் ஒரு சாலையும் போக்குவரத்துக்குப் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் கூறின.

புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான செபு வட்டாரத்தில் 3.4 மில்லியன் பேர் வசிக்கின்றனர்.

மக்டான்-செபு அனைத்துலக விமான நிலையத்தின் செயல்பாடுகள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

வானொலி நேர்காணல் ஒன்றில் பேசிய சான் ரெமிகியோ நகரத் துணை மேயர் அல்ஃபி ரேய்ன்ஸ், அங்கு 22 பேர் உயிரிழந்துவிட்டதாகக் கூறினார்.

வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டோர்க்கு உணவு, குடிநீர் வசதிகளுக்கும் தேடல், மீட்புப் பணியில் ஈடுபடுவோர்க்கு அதற்கேற்ற கருவிகளுக்கும் உதவுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

“கனமழை பெய்யும் வேளையில் மின்சாரமும் தடைபட்டுள்ளது. குறிப்பாக வடபகுதியில் இருப்போர்க்கு உதவி தேவை. ஏனெனில் அங்கு நிலநடுக்கத்தால் த் தண்ணீர்க் குழாய்கள் சேதமடைந்திருப்பதால் தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது,” என்று திருவாட்டி அல்ஃபி கூறினார்.

வர்த்தகத் தொலைபேசி அழைப்புகளுக்கான நிலையம் ஒன்றின் ஊழியர்கள், செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 30), நிலநடுக்கத்தை அடுத்துத் தங்கள் அலுவலகத்துக்கு வெளிப்புறத்தில் கூடிநின்றனர்.
வர்த்தகத் தொலைபேசி அழைப்புகளுக்கான நிலையம் ஒன்றின் ஊழியர்கள், செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 30), நிலநடுக்கத்தை அடுத்துத் தங்கள் அலுவலகத்துக்கு வெளிப்புறத்தில் கூடிநின்றனர். - படம்: ஏஎஃப்பி

நிலநடுக்கக் கண்காணிப்பு அமைப்புகள், இந்த நிலநடுக்கம் ஏறக்குறைய 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையங்கொண்டிருந்ததாகக் கூறுகின்றன.

நிலநடுக்கத்துக்குப் பிந்திய அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் அவற்றில் ஆக வலுவானது ரிக்டர் அளவுகோலில் 6ஆகப் பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், இந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

தொடர்ந்து அதிர்வுகள் ஏற்படக்கூடும் என்றும் கடலில் நீர்மட்டம் அடிக்கடி மாறக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அலைகளின் சீற்றம் கடுமையாக இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்