கடந்த 90 ஆண்டுகளாக தமிழ் முரசு ஏற்படுத்தி வரும் தாக்கம் அளப்பரியது.
சிங்கப்பூரர்கள் மட்டுமன்றி சிங்கப்பூரில் வாழும் நிரந்தரவாசிகளும் வெளிநாட்டினரும் சிங்கப்பூரின் தமிழ்ச் சமூகத்துடன் ஒருங்கிணைய வாய்ப்பளித்து வருகிறது தமிழ் முரசு.
அவர்களில் ஒருவர் தொடக்கப்பள்ளி மாணவர் பராமரிப்புத் துறையில் பணிபுரிந்துவரும் திருவாட்டி ரம்யா சுரேஷ், 46.
25 ஆண்டுகளுக்குமுன் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த திருவாட்டி ரம்யா, சிங்கப்பூர் பற்றியும் சிங்கப்பூரிலுள்ள தமிழ்ச்சமூகத்தைப் பற்றியும் தெரிந்துகொள்ள விரும்பினார்.
தேசிய நூலக வாரியத்தில் தம் கணவர் தமிழ் முரசு நாளிதழைக் காட்டி, “இதுதான் சிங்கப்பூரின் உள்ளூர் தமிழ்ச் செய்தித்தாள்,” எனத் தமக்கு அறிமுகப்படுத்தியதாகக் கூறினார் திருவாட்டி ரம்யா.
தமிழ் முரசு நாளிதழ் அவருக்கும் தமிழர் சமூகத்திற்கும் இடையே ஒரு பாலமாக அமைந்ததாகப் பகிர்ந்துகொண்டார் திருவாட்டி ரம்யா.
“சமூகத்தில் என்னென்ன நடக்கிறது போன்றவற்றையெல்லாம் தமிழ் முரசு மூலமாகத் தான் தெரிந்துகொண்டேன்”, என்றார் அவர்.
மேலும் சிண்டா, வளர்தமிழ் இயக்கம் போன்ற அமைப்புகள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளைத் தமிழ் முரசு மூலம் தெரிந்துகொண்டு குடும்பத்துடன் பங்கெடுக்கவும் செய்தார் திருவாட்டி ரம்யா.
தொடர்புடைய செய்திகள்
2010ஆம் ஆண்டு அவர் பங்கெடுத்த குடும்ப தின நிகழ்ச்சி போன்ற பல நிகழ்ச்சிகளின் வழி மக்களைச் சந்தித்துப் பேசிப் பழகி சமூகத்துடன் ஒருங்கிணைய முடிந்ததாக அவர் கூறினார்.
இன்று தாம் ஏற்படுத்திக்கொண்ட நட்பு வட்டம் தமிழ் முரசால் விதைக்கப்பட்டது எனக் குறிப்பிட்டார் அவர்.
தொழில்நுட்ப உலகத்தில் தமிழ் முரசு கால்பதித்ததையடுத்து அதன் அச்சிதழைப் படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டதாக குறிப்பிட்ட திருவாட்டி ரம்யா, இன்று இணையம் வாயிலாகவே செய்திகளைப் படிக்க விரும்புகிறார்.
ஆனால், அதற்குச் சற்று மாறுபட்டவர் பொறியாளராகப் பணிபுரியும் திருவாட்டி ராஜேஸ்வரி தேவி வெங்கடேஷ், 37.
தமிழ் முரசு நாளிதழின் அச்சிதழை விரும்பும் இவர், இன்றுவரை ஒவ்வொரு நாள் காலையும் தமிழ் முரசுடன் தொடங்குவதாகக் கூறினார்.
2011ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு வந்த திருவாட்டி ராஜேஸ்வரி, சிங்கப்பூர் பற்றிய செய்திகளையும் தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள எண்ணினார்.
அந்நேரத்தில் தொடக்கப் பள்ளிக்குச் செல்லத் தொடங்கிய தம் பிள்ளைகளின் மூலமாக மாணவர் முரசுக்கு அறிமுகமானார் திருவாட்டி ராஜேஸ்வரி.
திருவாட்டி ரம்யா போலவே இவரும் சிங்கப்பூரில் நடக்கும் நிகழ்ச்சிகள் பற்றி தமிழ் முரசு மூலம் படித்து தெரிந்துகொண்டார்.
சிங்கப்பூரின் கல்விமுறையை நன்கு அறிந்துகொள்ள தமிழ் முரசு வாய்ப்பளித்ததாகக் கூறிய திருவாட்டி ராஜேஸ்வரி, தொடக்கப் பள்ளி இறுதியாண்டுத் தேர்வு போன்ற தேர்வுகள் பற்றி பெற்றோர்களின் கண்ணோட்டத்தையும் புரிந்துகொள்ள தமிழ் முரசு உதவியது என குறிப்பிட்டார்.
தொடக்கப் பள்ளி இறுதியாண்டுத் தேர்வு எழுதும் மாணவர்களை உயர்நிலைப் பள்ளியைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி மனவுளைச்சலுக்கு ஆளாக்கக்கூடாது என்பது பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த செய்தியை நினைவுகூர்ந்தார் திருவாட்டி ராஜேஸ்வரி.
அதன்வழி, தம்மால் சிங்கப்பூரிலுள்ள மற்ற பெற்றோர்களின் மனநிலையையும் கண்ணோட்டத்தையும் புரிந்துகொள்ள முடிந்ததாக அவர் சொன்னார்.
மற்றொருவர் சிங்கப்பூரில் மனிதவள நிர்வாகியாகப் பணிபுரிந்து வரும் திருவாட்டி உஷாராணி முருகபாண்டியன், 47.
2001ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு வந்த திருவாட்டி உஷாராணி 2007ல் வேலைக்குச் செல்லத் தொடங்கிய போதுதான் தமிழ் முரசுக்கு அறிமுகமானார்.
உலக, உள்ளூர் நடப்புகளுக்குத் தமிழ் முரசு நாளிதழை நாடும் மற்றொருவர் கடந்த 32 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வாழும் செயல்பாட்டு உதவி மேலாளர் சிவராமகிருஷ்ணன், 55.
1993ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு வந்த அவர், தமிழ் முரசு படிக்கத் தொடங்கிய போது சிங்கப்பூரின் தமிழ்மொழி பாணிக்கும் இந்தியாவிலுள்ள பாணிக்கும் இடையிலான வேறுபாட்டை உணர்ந்தார்.
தமிழ் முரசைப் படிப்பதால் தம்மால் சிங்கப்பூரில் பேசப்படும் பாணியைக் கற்றுக்கொள்ள முடிந்ததாகத் திரு சிவராமகிருஷ்ணன் பகிர்ந்துகொண்டார்.