தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முதியவர்கள் துடிப்புடன் மூப்படைய உதவும் நோக்கில் தேசிய நூலக வாரியம் ‘உங்கள் வாழ்க்கையின் முதன்மையான நேரம்: ஒரு கொண்டாட்டம்’ எனும் நிகழ்ச்சிக்கு 14வது முறையாக ஏற்பாடு செய்துள்ளது.
‘கண்டுபிடிப்பு மூலம் தலைமுறைகளை இணைத்தல்’ என்ற கருப்பொருளில் இடம்பெறும் அந்நிகழ்ச்சியில் மூத்தோர், இளையர், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொள்ளலாம்.
சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தோடு இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட அந்தக் கொண்டாட்டம், இம்முறை ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு, மூத்தோரைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்துள்ள தேசிய அளவிலான கொண்டாட்டத்தோடு சேர்ந்து நடத்தப்படுகிறது.
மூப்படைதலை ஒட்டிக் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முனைப்பில் 100க்கும் மேற்பட்ட உரையாடல் அமர்வுகள், விளக்கக்காட்சிகள் போன்ற அம்சங்களை மக்கள் எதிர்பார்க்கலாம்.
தேசிய வளர்ச்சி, தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சுகளுக்கான மூத்த துணை அமைச்சர் டான் கியெட் ஹாவ், திங்கட்கிழமை (அக்டோபர் 14) காலை தேசிய நூலகக் கட்டடத்தில் கொண்டாட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
இதன் முக்கிய அங்கமாக தேசிய நூலகக் கட்டடத்தில் இம்மாதம் 16ஆம் தேதி வரை சிறப்புக் கண்காட்சி நடைபெறும்.
மூத்தோருக்கு வெவ்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து எடுத்துக்கூறும் நடவடிக்கைகளுக்கான முகப்புகள் அதில் அமைக்கப்பட்டுள்ளன.
பராமரிப்பாளர்கள் மூத்தோரைக் கவனித்துக்கொள்ளும் முறைகள், துடிப்புடன் வாழ மூத்தோர் ஈடுபட வேண்டிய நடவடிக்கைகள், மூத்தோரின் அறிவாற்றலை மேம்படுத்தும் நடவடிக்கைகள், இருவழித் தொடர்பு நடவடிக்கைகள் போன்றவை அவற்றில் அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
“தொழில்நுட்பப் பயன்பாடு மூலம் எவ்வாறு மூத்தோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தலாம் என்று எடுத்துரைப்பது இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம். அதிகமான மூத்தோர் இதில் கலந்துகொண்டு தங்களின் வாழ்க்கைமுறையை மேம்படுத்துவதற்கு உதவும் வழிகளைக் கற்றுக்கொள்ளலாம்,” என்றார் நூலகர் ஜமுனா.
“முதுமை நிலையத்தில் நான் பல ஆண்டுகளாக உறுப்பினராக இருக்கிறேன். இந்நிகழ்ச்சி பற்றி கேள்விப்பட்டவுடன் இதில் கலந்துகொள்ள எனக்கு ஆர்வம் வந்தது. எனக்கு 80 வயதாகிறது. நான் துடிப்புடன் பல தொழில்நுட்பக் கூறுகளைகயும் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். தனியாக வசிப்பதால் எனக்குத் தொழில்நுட்பம் பற்றிக் கற்றுத்தர யாரும் இல்லை. இந்த நிகழ்ச்சி பேருதவியாக உள்ளது,” என்று திருவாட்டி கமலா தேவி மாரிமுத்து கூறினார்.
கொண்டாட்டத்தில் இடம்பெறும் இதர நிகழ்ச்சிகள் பற்றிய மேல் விவரங்களுக்கு https://go.gov.sg/toylc24 இணையத்தளத்தை நாடலாம்.

