எம்ஆர்டி நடைமேடையில் பானம் அருந்துவது குறித்த விவாதம்

எம்ஆர்டி நடைமேடையில் பானம் அருந்துவது குறித்த விவாதம்

2 mins read
cc8ee231-cb9d-4b53-b4b5-d152a5ebb6c4
எம்ஆர்டி நிலையங்களில் ரயில்களுக்குள் மட்டுமல்லாமல், கட்டணம் செலுத்திப் பயன்படுத்தும் அனைத்துப் பகுதிகளிலும் சாப்பிடுவதும் குடிப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது. - படம்: எஸ்ஜி டெய்லி

புகிஸ் எம்ஆர்டி ரயில் நிலைய நடைமேடையில் ஒரு பெண் சாதாரணமாக பபிள் டீ பானம் குடிக்கும் ஒரு சிறிய காணொளி மேகமாகப் பரவி வருகிறது. இது, ரயில் பெட்டிகளுக்குள் மட்டுமல்லாமல், நடைமேடையிலும் பானங்கள் அருந்துவது உண்மையில் விதிகளுக்கு எதிரானதா என்பது குறித்த விவாதத்தைத் தூண்டியுள்ளது.

‘தி எஸ்ஜி டெய்லி’யின் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட அந்தக் காணொளியில், அப்பெண் நடைமேடையில் நின்றுகொண்டு, ஒரு பானத்தைப் பருகிக்கொண்டே தனது கைப்பேசியைப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிகிறது.

அதே காணொளி அதன் டிக்டாக் பக்கத்திலும் பதிவிடப்பட்டது. அங்கு அது 300,000க்கும் அதிகமான பார்வைகளையும், இதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்பும் பல கருத்துகளையும் பெற்றது.

“அந்தப் பெண் செய்ததில் என்ன தவறு? அவர் ரயிலுக்குள் இல்லையே,” என்று ஒரு பயனர் டிக்டாக்கில் கருத்து தெரிவித்தார். “நடைமேடையில் குடிக்கலாம் என்று நினைத்தேன். ரயிலில் மட்டும்தானே குடிக்கக் கூடாது?” என்று மற்றொருவர் கூறினார்.

“நான் அப்படித்தான் செய்துகொண்டிருக்கிறேன், யாரும் என்னைத் தடுக்கவில்லை. நான் அந்தப் பானத்தை ரயிலுக்குள் குடிக்காத வரை, அது சரிதான்,” என்று மற்றொருவர் கூறினார்.

கருத்து தெரிவித்தோர் பலர், தாங்கள் இதற்கு முன்பும் ரயில் நிலைய நடைமேடைகளில் யாரும் தடுக்காமல் தண்ணீர் குடித்திருப்பதாகவும், அந்த விதி ரயில் பெட்டிகளுக்குள் மட்டுமே பொருந்தும் என்று தாங்கள் கருதியதாகவும் கூறினர்.

எஸ்எம்ஆர்டியின் விளக்கம்

விரைவுப் போக்குவரத்து அமைப்பு விதிமுறைகளின் கீழ், எம்ஆர்டி நிலையங்களில் ரயில்களுக்குள் மட்டுமல்லாமல், கட்டணம் செலுத்திப் பயன்படுத்தும் அனைத்துப் பகுதிகளிலும் சாப்பிடுவதும் குடிப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது என்று எஸ்எம்ஆர்டி செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெளிவுபடுத்தியதாக ஷின் மின் டெய்லி தெரிவித்தது.

“அனைத்துப் பயணிகளுக்கும் வசதியான மற்றும் இனிமையான பயணச் சூழலை உருவாக்கும் வகையில், தூய்மையைப் பராமரிக்கவும் பூச்சித் தொல்லைகளைத் தடுக்கவும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த விதிமுறை நடைமுறையில் உள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
எம்ஆர்டிபானம்போக்குவரத்துடிக்டாக்