பொழுது விடிவதற்கு முன்பே துவாசிலுள்ள மையச் சமையற்கூடத்தில் நான்கு பள்ளிகளுக்காக 1,000 முதல் 1,400 ‘பென்டோ’ பெட்டிகளில் உணவு தயாராகத் தொடங்கிவிடுகிறது.
அதிகாலை மணி 4.45க்குத் தொடங்கும் சமையல் வேலைகள் 5.30 மணிக்குள் முடிகின்றன. அதன்பின், உணவு சிறுபெட்டிகளில் அடைக்கப்பட்டு, மூடி, நான்கு வாகனங்களில் ஏற்றி அனுப்பப்படுகிறது. காலை 6.45 மணிக்குள் இப்பணிகள் முடிந்துவிடுகின்றன.
செம்பவாங்கில் உள்ள நார்த்ஓக்ஸ் தொடக்கப் பள்ளியும் அந்த நான்கு பள்ளிகளில் ஒன்று. அங்குள்ள கடைகளில் உணவு சூடாக வைக்கப்பட்டிருக்கும்.
மையச் சமையற்கூடத்தில் தயாரான உணவுவகைகளில் கோழிக்கறி, காய்கறிகள் சேர்க்கப்பட்ட கலவை தானியச் சோறும் அடங்கும். அவ்வுணவானது பிள்ளைகளிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
“வரிசையில் நிற்க வேண்டியிராததால் இந்த முறையை நான் விரும்புகிறேன்,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளரிடம் கூறினார் தொடக்கநிலை 2ல் பயிலும் பிரிசிலா டைட்டஸ்.
‘வில்மார் டிஸ்டிரிபியூஷன்’ நிறுவனம் அந்த மையச் சமையற்கூடத்தை ஏற்று நடத்துகிறது. அங்கு இடம்பெறும் உணவுத் தயாரிப்புப் பணிகளைப் பார்வையிட ஊடகத்தினருக்கு ஜனவரி 14ஆம் தேதி அது தனது கதவுகளைத் திறந்துவிட்டது.
இம்மாதம் 2ஆம் தேதியிலிருந்து 13 தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளுக்கு உணவு தயாரித்து வழங்கும் மூன்று நிறுவனங்களில் வில்மாரும் ஒன்று. கேசுவரினா தொடக்கப் பள்ளி, சொங்செங் தொடக்கப் பள்ளி, அவுட்ரம் உயர்நிலைப் பள்ளி ஆகியவை அந்நிறுவனம் உணவு வழங்கும் மற்ற மூன்று பள்ளிகள்.
பள்ளிகளில் உணவுக்கடைகளை ஏற்று நடத்துவோர்க்கான பற்றாக்குறை காரணமாகப் பல பள்ளிகளும் மையச் சமையல்கூடத்தை நாடியுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இரு நாள்களுக்குமுன் மாணவர்களிடமிருந்து உணவுக் கோரிக்கைகளைப் பெறும் வில்மார் நிறுவனம், அன்று மாலைக்குள் தேவையான பொருள்களை வாங்கிவிடுகிறது. மறுநாள் உணவுத் தயாரிப்பிற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
“உணவை அப்போதுதான் சமைத்ததுபோல் வைத்திருப்பதற்கு நேரம் மிகவும் முக்கியம்,” என்றார் வில்மார் மைய சமையற்கூடத்தின் இயக்குநர் ஹோ ஷோ ஃபூங். உணவு கெட்டுப்போகாமல் தடுக்க, சமைக்கப்பட்டதும் அதனைப் பெட்டிகளில் அடைப்பதற்குத் தாங்கள் முன்னுரிமை அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கிட்டத்தட்ட 15 ஊழியர்கள் உணவைச் சமைப்பதிலும் அவற்றைப் பெட்டிகளில் அடைப்பதிலும் ஈடுபடுகின்றனர். ஏழு ஊழியர்கள் ஒவ்வொரு பள்ளிக்கும் உணவை எடுத்துச் சென்று வழங்குகின்றனர்.
பள்ளிகளில் உள்ள இயந்திரத்தில் ‘சிம்ப்ளிகோ’ பள்ளித் திறனட்டையைத் தட்டி மாணவர்கள் உணவைப் பெற்றுக்கொள்ளலாம். முன்கூட்டியே கோரப்பட்ட (pre-ordered) உணவுகள் $2 வெள்ளி முதல் $3.50 விலையில் கிடைக்கின்றன.
மையச் சமையற்கூடத்துடன் நான்கு பள்ளிகளில் நேரடி உணவுக்கடைகளையும் வில்மார் ஏற்று நடத்துகிறது.

