$8.2 மில்லியன் சிங்டெல் பங்குகளை விற்றார் தலைமை நிர்வாக அதிகாரி

$8.2 மில்லியன் சிங்டெல் பங்குகளை விற்றார் தலைமை நிர்வாக அதிகாரி

படம்: சிங்டெல்

15 Nov 2026 - 7:36 pm

2 mins read

சிங்டெல் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி யுவென் குவான் மூன் கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) தன்னுடைய இரண்டு மில்லியன் சிங்டெல் பங்குகளை விற்றுவிட்டார்.

நிறுவனத்தின் அரையாண்டு முடிவுகள் வெளியாகி, முழு ஆண்டு செயல்பாட்டு முன்னுரைப்பு உயர்த்தப்பட்ட நிலையில் அப்பங்குகள் விற்கப்பட்டன.

ஒரு பங்கு 4.074 வெள்ளிக்கு விற்கப்பட்டதன் மூலம், தரகு, முத்திரைக் கட்டணங்களுக்குமுன் 8.2 மில்லியன் வெள்ளி அவருக்குக் கிடைத்தது எனச் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பங்குச்சந்தை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, திரு யுவென்னின் நேரடிப் பங்குகள் 9.7 மில்லியனிலிருந்து 7.7 மில்லியனாகக் குறைந்தன. மறைமுகப் பங்குகள் 4.1 மில்லியனாக மாறாமல் இருக்க, அவரிடம் மொத்தம் 11.9 மில்லியன் பங்குகள் உள்ளன. இது சிங்டெல்லின் சாதாரணப் பங்குகளில் 0.073 விழுக்காடு.

செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிந்த அரையாண்டில், சிங்டெல் நிறுவனத்தின் நிகர லாபம் 55 விழுக்காடு சரிந்து, 1.5 பில்லியன் வெள்ளியாகப் பதிவானது. இருப்பினும், சிறப்பு அம்சங்களைத் தவிர்த்த அடிப்படை நிகர லாபம் 10 விழுக்காடு உயர்ந்து 1.49 பில்லியன் வெள்ளியை எட்டியது.

என்சிஎஸ், டிஜிட்டல் இன்ஃபிராகோ, ஆப்டஸ் ஆகியவற்றின் வலுவான செயல்திறனும், ஏர்டெல், ஏஐஎஸ் ஆகியவற்றின் பங்களிப்பும் இதற்கு உதவின.

இதனிடையே, 2027 நிதியாண்டுக்கான செயல்பாட்டு லாப வளர்ச்சி முன்னுரைப்பை சிங்டெல் உயர்த்தியுள்ளது. அத்துடன், ஒரு பங்குக்கு ஒன்பது காசு இடைக்கால லாப ஈவு வழங்கவும் அந்நிறுவனம் ஒப்புதல் அளித்தது.

கடந்த வெள்ளிக்கிழமை பங்கு வணிக முடிவில் சிங்டெல் பங்குவிலை 4.11 வெள்ளியாக முடிவடைந்தது.

குறிப்புச் சொற்கள்