‘ஏ’ பிரிவிலும் ‘இ’ பிரிவிலும் வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணம் ஏற்றம் கண்டுள்ளது.
புதன்கிழமை (ஏப்ரல் 23) நடந்த ஏலக்குத்தகையில், சிறிய வகை கார்களுக்கான ‘ஏ’ பிரிவில் சிஓஇ கட்டணம் 1.8 விழுக்காடு கூடியது. அதாவது, $99,500லிருந்து $97,724ஆக உயர்ந்தது.
அதுபோல, பொதுப்பிரிவான ‘இ’ பிரிவில் சிஓஇ கட்டணம் 0.9 விழுக்காடு கூடி, அதாவது $117,000லிருந்து $118,001ஆக அதிகரித்தது. மோட்டார்சைக்கிள் தவிர்த்த மற்ற வகை வாகனங்களுக்குப் பொதுப் பிரிவுச் சான்றிதழைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதர மூன்று பிரிவுகளிலும் சிஓஇ கட்டணம் சரிவுகண்டது.
அதிக ஆற்றல்மிக்க கார்களுக்கும் மின்சார வாகனங்களுக்கான ‘பி’ பிரிவில் சிஓஇ கட்டணம் 0.8 விழுக்காடு குறைந்தது. இரு வாரங்களுக்கு முந்திய ஏலக்குத்தகையில் $117,899 என முடிந்த அக்கட்டணம், அண்மைய ஏலக்குத்தகையில் $117,003 என இறக்கம் கண்டது.
வணிக வாகனங்களுக்கான ‘சி’ பிரிவில் சிஓஇ கட்டணம் $68,782லிருந்து 5.5 விழுக்காடு சரிந்து, $65,001ஆகப் பதிவானது.
அதுபோல, மோட்டார்சைக்கிள்களுக்கான ‘டி’ பிரிவுக் கட்டணமும் 5.9% குறைந்தது. அதாவது, $9,889லிருந்து $9,309க்கு இறங்கியது.
கடந்த பிப்ரவரி-ஏப்ரல் வரையிலான மூன்று மாதங்களுக்கான கடைசி ஏலக்குத்தகையாக புதன்கிழமை நடந்த ஏலக்குத்தகை அமைந்தது.
மே முதல் ஜூலை வரையிலான மூன்று மாதங்களுக்கு வாகனச் சான்றிதழ்களின் ஒதுக்கீடு 6.4 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, பிப்ரவரி-ஏப்ரல் காலகட்டத்தில் 17,133 சான்றிதழ்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், அடுத்த மூன்று மாதங்களுக்கான அந்த எண்ணிக்கை 18,232ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

