சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே பரிமாற்றம் செய்யப்படும் வர்த்தகப் பொருள்களின் நகர்வை விரைவுபடுத்தும் ஒப்பந்தம் ஒன்றில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.
‘ஏஇஓ’ (AEO) எனப்படும் அதிகாரம் பெற்ற பொருளியல் செயலாக்க நிறுவனங்களின் பொருள்களை விரைவில் சிங்கப்பூருக்குத் தருவிக்கவும் இந்தியாவுக்கு அனுப்பவும் மே 20ஆம் தேதி கையெழுத்திடப்பட்ட அந்த ஒப்பந்தம் உதவுகிறது.
அத்துடன், ஏற்றுமதி செய்யும்போது அதற்கான பத்திரங்கள், சரக்குப் பொருள்கள் ஆகியவற்றுக்கான சோதனைகளும் குறைக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூர்ச் சுங்கத் துறையின் தலைமை இயக்குநர் டான் ஹுங் ஹுய், இந்தியாவின் மறைமுக வரிகளுக்கும் தீர்வைகளுக்குமான மத்திய கழகத்தின் தலைவர் சஞ்சய் குமார் அகர்வால் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
ஹாங்காங்கில் 26ஆம் உலகச் சுங்கத் துறை அமைப்பின் ஆசிய பசிஃபிக் சுங்கத் துறை நிர்வாக மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தியாவும் சிங்கப்பூரும் எப்போதும் வலுவான வர்த்தக, பொருளியல் பிணைப்புகளைக் கொண்டுள்ளதாகக் கூறிய திரு டான் ஹுங் ஹுய், வர்த்தகச் செயல்திறனை அதிகரிப்பதுடன் தளவாடத் தொடர்களை இந்த ஒப்பந்தம் பாதுகாப்பதாகக் கூறினார்.
‘எஸ்டிபி பிளஸ்’ (STP Plus) எனப்படும் பாதுகாக்கப்பட்ட வர்த்தகப் பங்காளித்துவத் திட்டத்தில் சேரும்படி கூடுதலான சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் நம்பகத்தன்மை வாய்ந்த வர்த்தகப் பங்காளிகள் கொண்டுள்ள தொடர்பு வட்டத்தின் பயன்களை அடையும்படி கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறினார்.
நம்பகத்தன்மை வாய்ந்த வர்த்தகத்தையும் தளவாடத் தொடரையும் மேம்படுத்துவதில் இந்தியத் தரப்பு கொண்டுள்ள கடப்பாட்டை இந்த இருநாட்டு ஒப்பந்தம் பிரதிபலிப்பதாகத் திரு சஞ்சய் குமார் அகர்வால் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
எஸ்டிபி பிளஸ் திட்டத்தின்கீழ் சிங்கப்பூர்ச் சுங்கத் துறை இதுவரை 84 நிறுவனங்களுக்கு ஏஇஓ சான்றிதழ்களை வழங்கியுள்ளது.
சிங்கப்பூர்ச் சுங்கத்துறை இதுவரை மலேசியா, சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட 13 தரப்புகளுடன் இத்தகைய ஒப்பந்தங்களைச் செய்துகொண்டுள்ளது.