தனிநபர் நடமாட்ட ஸ்கூட்டரை (mobility scooter) விற்பனை செய்வது சைக்கிளை விற்பதுபோல் எளிதாக இருந்துவந்தது.
ஆனால் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி புதிய விதிமுறைகள் நடப்புக்கு வந்த பிறகு தனிநபர் நடமாட்ட ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட தனிநபர் நடமாட்டச் சாதனங்களை (பிஎம்ஏ) விற்கும் சில்லறை வர்த்தகர்கள் சவால்களை எதிர்நோக்குகின்றனர். கூடுதல் ஆவணங்கள், அதிக நிர்வாகச் சுமை ஆகியவற்றை அவர்கள் சந்திக்கின்றனர்.
புதிய விதிமுறைகளின்படி தனிநபர் நடமாட்டச் சாதனத்தை வாங்க வாடிக்கையாளர் சுகாதாரரீதியாகத் தகுதிபெறுகிறாரா என்பதை உறுதிசெய்து அதற்கான உரிமத்தை விற்பனையாளர், நிலப் போக்குவரத்து ஆணையத்தின் ஒன்மோட்டோரிங் இணையத்தளம் வாயிலாக வாடிக்கையாளரின் பெயருக்கு மாற்றவேண்டும்.
ஊழியர் தேவை
இந்நிலையில், புதிய விதிமுறைகள் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிப்பது, உரிமத்தை மாற்றிவிடும் நடவடிக்கைகள் ஆகியவற்றுக்காகவே கூடுதலானோரை வேலைக்கு எடுக்கவேண்டியிருப்பதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
விதிமுறைகளின்படி 120 X 70 X 150 சென்டிமீட்டர் அளவு அல்லது ஏற்றப்பட்ட பொருள்களையும் சேர்க்கும்போது மொத்த எடை 300 கிலோகிராம் கொண்ட தனிநபர் நடமாட்டச் சாதனங்களைப் பொதுமக்களுக்கான பாதைகளில் ஓட்டக்கூடாது. அதிகாரபூர்வமாக விதிவிலக்கு அளிக்கப்பட்டால் மட்டுமே அவ்வாறு செய்ய முடியும்.
அந்த வகையில், பெரிய உடல்வாகு உள்ளவர்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள தனிநபர் நடமாட்டச் சாதனங்களை விற்க இனி அனுமதி கிடையாது.
70 வயதைத் தாண்டியவர்கள்
மேலும், 70 வயதைத் தாண்டியவர்கள் தங்களுக்கு மருத்துவரீதியான தேவைகள் இருப்பதால்தான் தனிநபர் நடமாட்ட ஸ்கூட்டர்களை ஓட்டவேண்டியுள்ளது என்பதை ஆவணம் மூலம் நிரூபிக்கவேண்டும்.
அதோடு, தனிநபர் நடமாட்ட ஸ்கூட்டர்களை விளம்பரப்படுத்துவதற்கும் விற்பதற்கும் முன்பு விற்பனையாளர்கள் அவற்றைப் பதிவுசெய்யவேண்டும். பதிவுசெய்வதற்கான நேரத்தைத் தேர்ந்தெடுப்பதில் சிரமங்களைச் சந்திப்பதாக விற்பனையாளர்கள் சிலர் கூறுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
தனிநபர் நடமாட்டச் சாதனங்களின் உரிமத்தை மாற்றிவிட அவரவர் அடையாள அட்டை எண், பிறந்தநாள் விவரங்கள் ஆகியவை தேவை என்பது தெரிந்தவுடன் வாடிக்கையாளர்கள் சிலர் பின்வாங்குகின்றனர்.
விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம், சிறைத்தண்டனை உள்ளிட்ட தண்டனைகள் விதிக்கப்படக்கூடும்.

