தமிழாசிரியர் பணியின் சவால்கள்: ஆசிரியர்களைச் சந்தித்தார் ஹமீது ரசாக்

தமிழாசிரியர் பணியின் சவால்கள்: ஆசிரியர்களைச் சந்தித்தார் ஹமீது ரசாக்

2 mins read
ee3f77f8-061e-49c2-aff0-68d60df02746
‘சிம் லிம் டவர்’ கட்டடத்திலுள்ள சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்க அலுவலகத்தில் தமிழ் ஆசிரியர்களுடன் டாக்டர் ஹமீது ரசாக் உரையாடல். - படம்: ஹமீது ரசாக் 

சிங்கப்பூர்த் தமிழாசிரியர் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பயிற்சி ஆசிரியர்களைச் சந்தித்து, அவர்களின் பணி பற்றிய கருத்துகளைக் கேட்டறிந்ததாக வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீது ரசாக் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஆசிரியர் பணியில் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் குறித்து அவர்கள் பகிர்ந்ததாக டாக்டர் ஹமீது வியாழக்கிழமை (ஏப்ரல் 30) தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

தொழிலாளர் தினத்திற்கு முந்தைய நாளன்று நிகழ்ந்த உரையாடல்கள் பற்றி அந்தப் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்ட டாக்டர் ஹமீது, ஆசிரியர்களின் வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் கொள்கைகளை உருவாக்க அவை உதவுவதாகவும் குறிப்பிட்டார்.

தமிழ்க்கல்வித் துறையில் ஆசிரியர்கள் தாங்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி விளக்குகின்றனர்.
தமிழ்க்கல்வித் துறையில் ஆசிரியர்கள் தாங்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி விளக்குகின்றனர். - படம்: ஹமீது ரசாக் 

“பகிரப்பட்ட ஆழ்ந்த கருத்துகளுக்கு மிக்க நன்றி. நாம் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. மேலும், அனைத்தையும் முன்னோக்கிக் கொண்டுசெல்ல அனைத்துத் தரப்பினருடனும் இணைந்துப் பணியாற்ற நான் கடமைப்பட்டுள்ளேன்,” என்றார் டாக்டர் ஹமீது.

தமிழாசிரியர் பணியை மகிழ்வூட்டும் அனுபவமாக மாற்றப் பெருமுயற்சி

டாக்டர் ஹமீது குறிப்பிட்டபடி அந்தக் கலந்துரையாடல் பயனுள்ளதாக அமைந்திருந்ததைச் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் தொழிற்சங்கத் தலைவர் தனபால் குமார் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

“அதிகமான இளையர்களைத் தமிழாசிரியர் பணிக்கு ஈர்ப்பது தொடர்ந்து சவாலாகவே இருந்து வருகிறது. அதற்கு ஒருவேளை பணிச்சுமை, ஆசிரியர் பயிற்சி தொடர்பிலான சவால்கள் ஆகியவை காரணங்களாக இருக்கின்றனவா என்பதைக் கண்டறிய இக்கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது,” என்று திரு தனபால் கூறினார்.

ஆசிரியர் பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்கள், ஆரம்பநிலை ஆசிரியர்கள் ஆகியோர் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிப் பேசப்பட்டன. அத்துடன், அவர்களுக்கு எவ்வாறு உதவலாம் என அறிந்துகொள்ளவும் அந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகத் திரு தனபால் கூறினார்.

கற்றலை மகிழ்வூட்டும் முனைப்போடு செயல்படுத்தும் ஆசிரியர்களின் கற்பித்தல் அனுபவமும் மகிழ்ச்சியாக இருப்பதற்குத் தீர்வுகள் தேவைப்படுவதாகத் திரு தனபால் கூறினார்.

“இதுபோன்ற கலந்துரையாடல் நடைபெறுவது இதுதான் முதல்முறை. இன்னும் பல்வேறு திட்டங்கள் உள்ளன. தமிழாசிரியர் பணியை மகிழ்வூட்டும் அனுபவமாக மாற்றுவதற்கும் அதிகமான இளையர்களைத் தமிழாசிரியர் பணியை நோக்கி ஈர்ப்பதற்கும் சங்கம் தொடர்ந்து முனைப்போடு செயல்படும்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்