சிங்கப்பூரின் முன்னேற்றத்துக்குத் தலைமுறைகளாகச் சிங்கப்பூரர்கள் முன்வந்து பங்களித்ததே காரணம் என்று கூறி, அவ்வகையில் இப்போதும் பங்காற்றிவரும் மூன்று இளையர்கள் குறித்துப் பேசினார் பிரதமர் வோங்.
அம்முன்று இளையர்களில் ஒருவரான சாந்தினி சுப்பிரமணியம், 23, “சமூகத்துக்காக ஒன்றுபட்டு உதவிக்கரம் நீட்டுவது சிங்கப்பூரர்களின் முக்கிய அடையாளம். அதனைப் பாதுகாப்பது அவசியம்,” என்றார்.
தமது 11 வயது முதல் தொண்டூழியப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் சாந்தினி. தாயாரின் வருமானத்தில் குடும்பத்தை வழிநடத்தும் எளிமையான பின்னணி கொண்டவர்.
ஆனாலும் தன்னலமின்றித் தொடர்ந்து சமூகப் பணிகளில் ஈடுபடுகிறார்.
“மூத்தோர், மனநலச் சிரமம் கொண்டோருடன் பணியாற்றுவதில் எனக்கு விருப்பம் அதிகம். முதலில், நமது வாழ்க்கைதான் மிகவும் சிரமமாக இருப்பதாக நினைத்தேன். ஆனால், சமூகத்தின் பல தரப்பினருடனும் பணியாற்றும்போது, அவர்கள் என்னைவிடக் கடினமான சூழல்களைச் சந்திக்கிறார்கள் என்பது தெரிகிறது. அப்போது எந்தப் பிரச்சினைகளும் பெரிதாகத் தெரிவதில்லை,” என்றார்.
“அவர்களைப் பார்க்கும்போது, ஒருவகை உத்வேகம் எழுகிறது. அவர்கள் முகத்தில் புன்னகையைப் பார்ப்பது மனநிறைவளிக்கிறது,” என்றும் குறிப்பிட்டார் சாந்தினி.
மனிதநேயத்தைத் தாண்டி, பல உயிர்களிடமும் நேசம் கொண்டவர் சாந்தினி. சிங்கப்பூர் வெளிப்புற நடவடிக்கையின் ஓர் அங்கமாக 21 நாள்கள் தொலைத்தொடர்பு சாதனங்களின்றி விலங்குகளுடன் நேரம் செலவிட்டது, அந்த நேசத்தை ஏற்படுத்திய முக்கியத் திருப்புமுனையாக அமைந்ததாகச் சுட்டினார்.
தேசிய இளையர் மன்றத்தின் ஆதரவுடன், ‘பெஸ்டா உபின்’ திட்டத்தை இவரது அணி செயல்படுத்தியதையும் சுட்டினார்.
மனிதர்களுக்குக் குறைந்தது பிரச்சினைகளை வெளிப்படுத்தும் ஆற்றல் இருப்பதாகவும், அதுவும் இல்லாத விலங்குகளிடம் அன்பும் கருணையும் கொண்டிருப்பது அடிப்படையான தேவை என்றும் கருதுவதாகத் தெரிவித்தார் சாந்தினி.
சமூகப் பங்களிப்பில் ஈடுபடும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவேண்டும் என்பதே தமது விருப்பம் என்ற அவர், தமது பெயரைப் பிரதமர் தமது வரவுசெலவுத் திட்ட உரையில் குறிப்பிட்டது மகிழ்ச்சியளிப்பதாகச் சொன்னார்.
பலரும் அழைத்து வாழ்த்தியதைக் குறிப்பிட்ட அவர், இதனைக் கேட்டு இளையர்கள் ஊக்கம்பெற்றாலோ, சமூகப் பணிகளில் ஈடுபட முன்வந்தாலோ அது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியாக அமையும்,” என்றார்.

