அதிக தொகை கொடுத்து ஏலமெடுப்பதைக் கட்டுப்படுத்தவும் குத்தகையில் நீடித்த நிலைத்தன்மையை ஊக்குவிக்கவும் நவம்பர் மாதத்திலிருந்து உணவங்காடிக் கடைகளுக்கான வாடகை புதுப்பிப்புக் கொள்கையை மறுபரிசீலனை செய்யவுள்ளதாகத் திங்கட்கிழமை (நவம்பர் 4) தேசிய சுற்றுப்புற வாரியம் அறிவித்துள்ளது.
ஏலக்குத்தகைக்கு விடப்பட்ட வாடகை (tendered rents) புதுப்பிப்பில் உடனடி மாற்றங்களைச் செய்யாமல், காலப்போக்கில் படிப்படியாக வாடகையைக் குறைப்பதற்கான திட்டத்தை அமல்படுத்தவுள்ளதாக இவ்வாண்டின் சிங்கப்பூர் உணவங்காடிக் கடைக்காரர்கள் கருத்தரங்க, விருதளிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் அறிவித்தார்.
புதிய கொள்கையின்கீழ், இந்தத் திருத்தப்பட்ட வாடகைக் கட்டமைப்பு, இரண்டாவது தவணையின்போது, ஆரம்பக்கால ஏலக்குத்தகை வாடகைக்கும் நடப்புச் சந்தை மதிப்பீட்டு வாடகைக்கும் இடையிலான இடைவெளியை 50% குறைக்கும். மூன்றாம் தவணையில் நடப்புச் சந்தை மதிப்பீட்டிற்கேற்ப அது முழுமையாகக் குறைக்கப்படும். எடுத்துக்காட்டாக, S$1,000 என மதிப்பிடப்பட்ட ஒரு கடை S$5,000 குத்தகைக்கு எடுக்கப்பட்டால், இரண்டாவது தவணையில் அதன் வாடகை S$3,000 ஆகவும், மூன்றாவது தவணையில் S$1,000 ஆகவும் குறையும்.
இம்மாற்றம் தற்போதைய உணவங்காடிக் கடைக்காரர்களைப் பாதிக்காது என்று டாக்டர் கோ குறிப்பிட்டார்.
அண்மையில் மரீன் பரேட் வட்டாரத்திலுள்ள ஒரு கடையை ஆரம்பகால ஏலகுத்தகையாக S$10,000க்கும் மேல் ஒருவர் ஏலம் எடுத்தது போல, நீடித்து நிலைக்க முடியாத வாடகைப் போக்கிற்கு வழிவகுக்கும் ஏலத்தைத் தடுப்பதைத் தேசிய சுற்றுப்புற வாரியம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும், 2025ஆம் ஆண்டுக்குள் எதிர்கால உணவங்காடிக் கடைக்காரர்களுக்கான ஆதரவை மேம்படுத்த, தற்போதுள்ள வளங்களுடன் செலவு மதிப்பீட்டு இணையக் கருவிகளையும் ஏலம் தொடர்பான கூடுதல் தகவல்களையும் அவர்களுக்கு வழங்க தேசிய சுற்றுப்புற வாரியம் திட்டமிட்டுள்ளது.
தேசிய சுற்றுப்புற வாரியத்தின் ஆதரவுடன் சிங்கப்பூர் வணிகர் சங்கக் கூட்டமைப்பு ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் இந்த விருதளிப்பு விழாவில் பாரம்பரியத்தை நிலைநிறுத்தி எதிர்காலத்தை வடிவமைக்கும் அவர்களின் முயற்சிகளுக்காக மொத்தம் 9 உணவுங்காடிக் கடைக்காரர்கள் அங்கீகரிக்கப்பட்டனர்.
அதுமட்டுமல்லாமல், பொதுமக்களிடம் முதன்முறையாக வாக்களிப்பு நடத்தப்பட்டு, சிராங்கூன் கார்டன் சந்தை, சிங்கப்பூரர்களுக்குப் பிடித்தமான உணவங்காடி நிலைய விருதைப் பெற்றது.