சிங்கப்பூர்-இந்தோனீசியா ஸ்கூட் சேவை நேரங்களில் மாற்றம்

சிங்கப்பூர்-இந்தோனீசியா ஸ்கூட் சேவை நேரங்களில் மாற்றம்

1 mins read
சில சேவைகளில் கூடுதல் பயணிகளை ஏற்றிச் செல்ல ஏற்பாடு
72a813a1-8d29-4699-a583-3764df49cd26
மலிவுக் கட்டண விமானச் சேவையான ஸ்கூட். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

மலிவுக் கட்டண விமானச் சேவையான ஸ்கூட் சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையே தான் வழங்கும் சேவை நேரங்களில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) மாற்றம் செய்தது.

மேலும், புதன்கிழமை (செப்டம்பர் 9) புறப்படும் சில சேவைகளில் கூடுதல் பயணிகளை ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனாக் கிரக்கத்தாவ் எரிமலை வெடிப்பால் இந்தோனீசியாவுக்குச் சென்றுவரும் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இம்மாதம் 4ஆம் தேதி அந்த எரிமலை குமுறத் தொடங்கியது.

சிங்கப்பூருக்கும் இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தா மற்றும் கெர்த்தாஜாத்திக்கும் இடையிலான ஆறு சேவைகள் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மலிவுக் கட்டண விமானச் சேவைப் பிரிவான ஸ்கூட் செவ்வாய்க்கிழமை ஆலோசனை அறிக்கையில் தெரிவித்தது.

புதன்கிழமை ஜகார்த்தாவிலிருந்து வந்து செல்லும் சில சேவைகளில் கூடுதல் பயணிகளை ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஸ்கூட் அந்த அறிக்கையில் கூறியது. குறிப்பிட்ட சில சேவைகளைத் தவிற அதன் மற்ற எல்லா சேவைகளும் திட்டமிடப்பட்ட நேரத்தில் இயங்குகின்றன.

சேவை மாற்றம் குறித்து பாதிக்கப்பட்ட பயணிகளைத் தான் தொடர்புகொண்டுள்ளதாக ஸ்கூட் தெரிவித்தது. பாதிக்கப்பட்ட பயணிகள் சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையிலான மாற்று ஸ்கூட் சேவைகளுக்குப் பதிவுசெய்யலாம்.

திட்டமிடப்பட்டபடி பயணத்தைத் தொடர விரும்பாதோர் முழுக் கட்டணத்தைத் திரும்பப் பெறக் கேட்டுக்கொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்ஸ்கூட்இந்தோனீசியாவிமானம்பயணிகள்பயணம்எரிமலைபேரிடர்