எஸ்பிஎச் மீடியா நிறுவனத்தின் தலைமைத்துவத்திலும் இயக்குநரவையிலும் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் வியாழக்கிழமை (அக்டோபர் 1) நடப்புக்கு வந்தன.
2021 முதல் ஐந்தாண்டுகளாக எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட், எஸ்பிஎச் மீடியா ஹோல்டிங்சின் தலைவராகப் பதவி வகித்த திரு கோ பூன் வான், 73, பணியிலிருந்து ஓய்வுபெறுகிறார்.
எஸ்பிஎச் மீடியாவின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பு வகித்துவந்த திரு சான் யெங் கிட், 61, புதிய நிர்வாகத் தலைவராகப் பொறுப்பேற்கிறார். அவர் தமது தற்போதைய பொறுப்புகளுடன் தலைமைத்துவப் பொறுப்புகளையும் கவனித்துக்கொள்வார்.
அதேவேளையில், நிறுவனத்தின் துணைத் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்துவந்த திரு குவெக் யூ சுவாங், 47, எஸ்பிஎச் மீடியாவின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலாண்மை இயக்குநராக, அவர் நிறுவனத்தின் அன்றாடச் செயல்பாடுகளை வழிநடத்துவார்.
அத்துடன், நிறுவனத்தின் உடனடி முதல் நடுத்தரகாலத் திட்டங்கள் வரை அவர் மேற்பார்வையிடுவார். நிறுவனத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் செயல்பாட்டுக்கும் தொடர்ந்து பொறுப்பேற்கும் திரு குவெக், எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட், எஸ்பிஎச் மீடியா ஹோல்டிங்ஸ் இயக்குநரவைகளிலும் இணைகிறார்.
திரு அபாஸ் அலி முஹம்மது இர்ஷாத், திரு எட்வர்ட் சென், திருவாட்டி கோஹே ஹசன், திருவாட்டி லியூ வெய் லீ ஆகியோர் இயக்குநரவையில் புதிய இயக்குநர்களாக இணைகின்றனர். தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, சமுதாய, இளையர் ஈடுபாடு எனப் பல்வேறு துறைகளில் அவர்கள் சிறந்த அனுபவமும் நிபுணத்துவமும் பெற்றவர்கள்.
இவ்வேளையில், திரு பேட்ரிக் டேனியல், திரு லீ யி ஷியான், திருவாட்டி லிம் மேய், திரு பஹ்ரேன் ஷாரி ஆகியோர் இயக்குநரவையிருந்து ஓய்வுபெறுகின்றனர்.
பிரதமர் லாரன்ஸ் வோங் வியாழக்கிழமை வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், திரு கோவுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். எஸ்பிஎச் மீடியா தலைவராகப் பொறுப்பேற்று, அதன் முக்கியமான உருமாற்றக் காலகட்டத்தில் வழிநடத்தியதற்கும் சிங்கப்பூருக்குப் பல ஆண்டுகள் அவர் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க சேவைக்கும் பிரதமர் நன்றி கூறினார்.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான பொதுச் சேவைக்குப் பிறகு, 2020ல் அரசியலிலிருந்து ஓய்வுபெற்ற திரு கோவை பிரதமர் வோங், மீண்டும் சேவையாற்றுமாறு கேட்கப்பட்டபோது எஸ்பிஎச் மீடியா ஹோல்டிங்ஸ், எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் தலைவராகப் பொறுப்பேற்க அவர் முன்வந்ததாகச் சுட்டிக்காட்டினார்.
“இது, ஊடகத் துறையில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்த காலகட்டமாகும். கோ பூன் வானின் தலைமைத்துவத்தின்கீழ் எஸ்பிஎச் மீடியா அதன் மின்னிலகம், பல்லூடகம் சார்ந்த ஆற்றலை வலுப்படுத்தியதுடன், புதிய வாசகர்களைச் சென்றடைந்தது. நான்கு அதிகாரபூர்வ மொழிகளிலும் சிங்கப்பூரர்களுக்குத் தொடர்ந்து அது சேவையாற்றியுள்ளது,” என்று பிரதமர் வோங் தமது பதிவில் கூறினார்.
பணி ஓய்வுபெறும் திரு கோவுக்கு தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ ஃபேஸ்புக் பதிவில் நன்றியும் வாழ்த்தும் தெரிவித்துக்கொண்டார்.
ஊடகப் பயன்பாட்டுப் பழக்கவழக்கங்கள் வேகமாக மாறிவரும் சூழலில், வாசகர்களின் நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொண்டே மின்னிலக்க ஆற்றலை வளர்க்கவும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி செய்தியின் தரத்தை உயர்த்தவும் திரு கோ அடித்தளமிட்டதை அவர் நினைவுகூர்ந்தார்.
வேகமாக மாறிவரும் ஊடகச் சூழலில், எஸ்பிஎச் மீடியாவின் பல்வேறு ஊடகத் தளங்கள் வாரந்தோறும் சிங்கப்பூரர்கள் பத்தில் ஒன்பது பேரைச் சென்றடைகின்றன. உத்தரவாதத்தால் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக மாற்றமடைந்த காலகட்டத்தில், நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமிட்ட தலைவர்களுக்கு எஸ்பிஎச் மீடியா மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டது.
வேகமாக வளர்ந்துவரும் நவீனத் தொழில்நுட்பச் சூழலுக்கேற்ப வாசகர்களின் விருப்பங்களை நிறைவேற்றி, நம்பகமான செய்திகளை அனைத்துத் தளங்களிலும் தொடர்ந்து மக்களுக்கு வழங்கப்போவதாக நிறுவனத்தின் புதிய தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.
