3, 3A வாகன ஓட்டுநர் உரிமத்தில் மாற்றங்கள்

2 mins read
337d1f50-b8a3-46bc-aa14-4923d74bd297
கிம் கியாட் அவென்யூ அருகில் உள்ள தீவு விரைவுச் சாலையில் காணப்பட்ட வாகனங்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் வாகன உரிமம் 3, 3A உள்ள வாகன ஓட்டுநர்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி முதல் குறிப்பிட்ட நான்கு வகையான கனரக மின்வாகனங்களை ஓட்டுவதற்கான அனுமதி வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து காவல்துறை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) அறிக்கை வெளியிட்டுள்ளது.

சரக்குகள் ஏற்றிச் செல்லும் மின்வாகனங்கள், சிறிய மின்பேருந்துகள் போன்ற 2,501 கிலோகிராம் முதல் 3,000 கிலோகிராம் சுமக்கப்படாத எடைகொண்ட (unladen weight) மின்வாகனங்கள் இந்தப் புதிய விதிமுறைக்கு உட்படும்.

நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்படும் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் பெற்ற பிறகு மேலும் சில வகை வாகனங்களும் இந்த மாற்றத்தில் இணைத்துக்கொள்ளப்படும் என்று போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த இரு வாகன உரிமங்கள் உடைய ஓட்டுநர்களுக்கு விலக்கு ஆணை டிசம்பர் 15ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டதும் அவ்வகை வாகனங்களை ஓட்டும் அனுமதி அமலுக்கு வரும்.

தொழில்துறையினர் கேட்டுக்கொண்டபடி குறிப்பாக நான்கு வகை வாகனங்களுக்கு இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துக் காவல்துறை குறிப்பிட்டது.

தற்போதைய சட்டப்படி, வாகன உரிமம் 3, 3A உள்ள வாகன ஓட்டுநர்கள் 2,501 கிலோகிராம் வரையிலான சுமக்கப்படாத எடைகொண்ட சரக்குகள் ஏற்றிச் செல்லும் வாகனங்களையும் (LGVs) சிறிய பேருந்துகளையும் ஓட்டமுடியும். அதற்கு மேற்பட்ட எடையுடைய வாகனங்களை ஓட்ட 4 அல்லது 4P வகை உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

புதிய மாற்றத்தின்படி டிசம்பர் 15ஆம் தேதி முதல் வாகன உரிமம் 3, 3A உள்ள வாகன ஓட்டுநர்கள் எவ்வித நடவடிக்கையும் செய்யத் தேவையில்லாமல், தானாகவே குறிப்பிடப்பட்ட எடைகொண்ட கனரக மின்வாகனங்களை ஓட்டுவதற்கான தகுதியைப் பெறுவார்கள்.

குறிப்புச் சொற்கள்