வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் (வீவக) கடைகளுக்கான ஏலத்தில் வெற்றி பெறுபவர்கள், சனிக்கிழமை (ஜனவரி 10) முதல், தாங்கள் குறிப்பிட்ட வாடகைத் தொகையைத் இரண்டு குத்தகைக் காலங்களுக்கு தொடர்ந்து செலுத்த உறுதியளிக்க வேண்டும்.
ஒவ்வொரு குத்தகைக் காலமும் மூன்று ஆண்டுகள் என்ற அடிப்படையில், இது மொத்தம் ஆறு ஆண்டுகளை உள்ளடக்கியது.
விவேகமான ஏல முறையை ஊக்குவிக்கும் நோக்கில், முந்தைய மூன்றாண்டு கால முறைக்குப் பதிலாக இந்தப் புதிய நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சனிக்கிழமை வீவக அறிவித்த இந்தப் புதிய நடைமுறை, காப்பிக் கடைகள், மருத்துவ நிலையங்கள் உட்பட அனைத்து வகையான வீவக கடைகளுக்கும் பொருந்தும்.
வர்த்தகக் கடைகளின் வாடகை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்த கவலைகளுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பாக, 2025ல் தெம்பனிசில் உள்ள ஒரு பொது மருத்துவச் சேவை மருந்தகத்திற்கு, சுகாதாரச் சேவை நிறுவனம் ஒன்று மாதத்திற்கு $52,188 என்ற ஆக அதிகமான தொகையை ஏலமாகக் கேட்டிருந்தது இக்கவலையை மேலும் அதிகரித்தது.
முன்பு, ஒவ்வொரு மூன்று ஆண்டு குத்தகைக் காலத்தின் முடிவிலும், வீவக நியமிக்கும் தொழில்முறை மதிப்பீட்டாளர்களால் வாடகை மறுமதிப்பீடு செய்யப்படும். ஆனால், திருத்தியமைக்கப்பட்ட புதிய கட்டமைப்பின்படி, இரண்டாவது தவணை (மொத்தம் ஆறு ஆண்டுகள்) முடிவடைந்த பிறகே மறுமதிப்பீடு நடைபெறும். அதன் பின்னர், ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மதிப்பீடு செய்யப்படும்.
தற்போது வீவக ஏறக்குறைய 7,000 கடைகளை வாடகைக்கு விட்டுள்ளது. அதே வேளையில் 8,500 கடைகள் தனியார் வசம் உள்ளன.
தனியார் துறையைச் சேர்ந்த கடைகளில், ஏறத்தாழ 7,700 கடைகள் 99 ஆண்டு குத்தகை அடிப்படையில் விற்கப்பட்டவை. அவற்றுக்கு இன்னும் 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கால அவகாசம் உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மீதமுள்ள 740 கடைகள் 30 ஆண்டு குத்தகை அடிப்படையில் விற்கப்பட்டவை. இவற்றில் 80 விழுக்காட்டிற்கு அதிகமான கடைகளுக்கு இன்னும் 10 ஆண்டுகளுக்கும் குறைவான காலமே எஞ்சியுள்ளது.
குறுகியகால குத்தகை கொண்ட இந்தக் கடைகள் படிப்படியாக வீவகவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு, மீண்டும் வாடகைக்கு விடப்படும். இது காலப்போக்கில் வீவக நிர்வகிக்கும் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
உணவு, பானத் துறையில் எழுந்துள்ள கவலைகள் குறித்து கடந்த மூன்று ஆண்டுகளில் தங்கள் காப்பிக் கடைகளின் வாடகை பெரும்பாலும் சீராகவே இருந்துள்ளதாக வீவக தெரிவித்தது. 2023 முதல் 2025 வரை 90 விழுக்காட்டுக் கடைகளில் வாடகை உயர்வு ஏதுமில்லை. இருப்பினும், சில காப்பிக் கடை நடத்துநர்கள், அங்குள்ள கடைக்காரர்கள்மீது அதிக வாடகையை அறிவிக்கும் என்ற அச்சம் நிலவுவதையும் வீவக சுட்டிக்காட்டியது.
வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் வகையில், காப்பிக் கடை நடத்துநர்கள் வசூலிக்கும் கடை வாடகை குறித்த தரவுகளைச் சேகரித்து வெளியிட வீவக திட்டமிட்டுள்ளது. கடைக்காரர்கள் சிறந்த, தெளிவான முடிவுகளை எடுக்க இது உதவும் என அது நம்புகிறது.
வரும் மாதங்களில் இந்தத் தரவுகளை ஆய்வு செய்யவுள்ள வீவக, அவை தயாரானதும் எந்தத் தளத்தில், எவ்விதமான வடிவத்தில் வெளியிடப்படும் என்பதை அறிவிக்கும்.

