சுற்றுப்பயணிகளின் திட்டங்களில் மாற்றம்; சில சுற்றுலா நிறுவனங்களில் முன்பதிவுகள் சரிவு

சுற்றுப்பயணிகளின் திட்டங்களில் மாற்றம்; சில சுற்றுலா நிறுவனங்களில் முன்பதிவுகள் சரிவு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

24 Oct 2026 - 1:07 pm

2 mins read

சிங்கப்பூரின் வானளாவிய கட்டடங்களைக் கண்டுரசிக்கும் நோக்கில் இம்மாதம் இங்கு வந்த சுற்றுப்பயணிகள், சாம்பல் நிற மேகங்களாலும் புகைமூட்டப் படலத்தாலும் ஏமாற்றமடைந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

சிலர் தங்கள் பயணத் திட்டங்களில் மாற்றங்களைச் செய்துகொண்டனர்; மற்றவர்கள் என்95 முகக்கவசங்களை அணிந்துகொண்டு பயணத்தைத் தொடர்ந்தனர்.

அவர்களில் தைவானைச் சேர்ந்த 32 வயதான ரயில் நிலைய மேலாளர் டெட் ஸெங் என்பவரும் ஒருவர்.

சிங்கப்பூருக்கான தமது முதல் பயணத்தை ரத்து செய்ய அவர் யோசித்திருந்தபோதும், அண்மைய நாள்களில் காற்றின் தரம் மேம்பட்டதைத் தொடர்ந்து அக்டோபர் 22ஆம் தேதி அவர் பயணத்தைத் தொடர்ந்தார்.

மெர்லயன் பூங்காவிற்குச் சென்றபோது ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய ஸெங், தமது ஐந்து நாள் பயணத்தின்போது மத்திய வர்த்தக வட்டாரத்தைச் சுற்றியுள்ள வெளிப்புறப் பகுதிகளுக்குச் சென்று பார்வையிடும் திட்டங்களைத் தொடரப்போவதாகவும் தேவைப்பட்டால் முகக்கவசம் அணிந்துகொள்ளப்போவதாகவும் கூறினார்.

இதற்கிடையே, அக்டோபர் 6, 7ஆம் தேதிகளில் நடைபெற்ற ‘டோக்கன்2049’ மின் நாணய மாநாட்டுக்காகச் சிங்கப்பூருக்கு வந்திருந்த உக்ரேனைச் சேர்ந்த மார்கரிட்டா ருச்கோ, அப்போது தமக்கு உடல்நிலை சற்று சரியில்லாமல் போனதாகத் தெரிவித்தார்.

28 வயதான அவரும் மாநாட்டில் கலந்துகொண்ட மற்றவர்களும் வெளிப்புறங்களில் செலவிடும் நேரத்தைக் குறைக்க முயன்றதாகக் கூறினார். சிலர் சிங்கப்பூர் வந்து இறங்கிய உடனே அதன் பாதிப்புகளை உணரத் தொடங்கியதாக அவர் கூறினார்.

காற்றின் தரம் குறித்துச் சுற்றுப்பயணிகள் தங்கள் கவலையை இங்குள்ள பயண நிறுவனங்களிடம் தெரிவித்துள்ளனர். இதனால், பயண முன்பதிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சில நிறுவனங்கள் கூறியுள்ளன.

செப்டம்பர் மாதத்தில் காற்றின் தரம் மோசமடையத் தொடங்கியதிலிருந்து, சிங்கப்பூருக்கான முன்பதிவுகளில் குறிப்பிடத்தக்கச் சரிவும், அதே நேரத்தில் முன்பதிவு ரத்துகளில் அதிகரிப்பும் காணப்பட்டுள்ளதாக ‘சிக்ஸ் ஸ்டார்ஸ் டுவர் அண்ட் சர்வீசஸ்’ நிறுவனம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
புகைமூட்டம்சுற்றுப்பயணிபாதிப்பு