சாங்கி விமான நிலையத்தில் 58 இந்திய நட்சத்திர ஆமைகளுடன் பிடிபட்டவருக்கு 16 மாதச் சிறை

2 mins read
6734dab8-f96a-4864-a468-e712e41667b0
பயணப்பெட்டியில் 58 இந்திய நட்சத்திர ஆமைகள் ஒரு துணி மூட்டையில் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்தன. - படம்: தேசிய பூங்காக் கழகம்

இந்திய நாட்டவரான அப்துல் ஜாஃபர் ஹாஜி அலி, பயணப்பெட்டி ஒன்றை இந்தோனீசியாவுக்குக் கொண்டுசெல்ல நண்பர் ஒருவருக்கு உதவ இணக்கம் தெரிவித்தார். அதில், பெண்களுக்கான உடைகள் இருந்ததாக அந்த நண்பர் ஜாஃபரிடம் கூறியிருந்தார்.

ஜகார்த்தா செல்வதற்கான வேறொரு விமானத்தில் ஏற ஆகஸ்ட் 29ஆம் தேதி இந்தியாவிலிருந்து சாங்கி விமான நிலையத்திற்கு வந்தார் ஜாஃபர், 40. எனினும், அந்தப் பயணப்பெட்டியில் 58 இந்திய நட்சத்திர ஆமைகள் இருந்தது கண்டறியப்பட்டது.

அவற்றில் ஒன்று மடிந்துவிட்டது, இதர 22 ஆமைகள் மெலிந்துவிட்டதாக பின்னர் மதிப்பிடப்பட்டது.

சிங்கப்பூருக்கு அந்த ஆமைகளைச் சட்டவிரோதமாக கொண்டுவந்த குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜாஃபருக்கு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 10) ஓராண்டு, நான்கு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

நீதிமன்ற ஆவணங்களில் ‘பாய்’ என அடையாளப்படுத்தப்பட்ட அந்த நண்பர், ஜாஃபரின் விமானப் பயணம், தங்குமிட வசதி என அனைத்து ஏற்பாடுகளைச் செய்து தந்தார். அதற்குக் கைமாறாக, ஜகார்த்தாவுக்குப் பயணப்பெட்டி ஒன்றைக் கொண்டுசெல்லுமாறு ஜாஃபரின் உதவியை பாய் நாடினார். ஜகார்த்தா விமான நிலையத்தில் அதைப் பெற்றுக்கொள்ள ஒருவர் வருவார் என பாய் கூறினார்.

ஆகஸ்ட் 28ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் ஜாஃபரிடம் அந்தப் பயணப்பெட்டியை பாய் ஒப்படைத்தார். அதில் என்ன இருந்தது என்பது பற்றி பாயிடம் ஜாஃபர் வினவவில்லை. அதில் பெண்களுக்கான துணிமணிகள் இருந்ததாக தாமாகவே பாய் கூறினார்.

ஆகஸ்ட் 29ஆம் தேதி, சாங்கி விமான நிலைய முனையம் 2க்கு வந்திறங்கிய ஜாஃபர், ஜகார்த்தா செல்ல மாற்று விமானத்தில் ஏறவிருந்தார்.

பரிசோதனையின்போது அந்தப் பயணப்பெட்டியில் சந்தேகத்திற்குரிய ஏதோ இருந்ததைக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிகள் கவனித்தனர்.

ஜாஃபரின் முன்னிலையில் அப்பெட்டியைத் திறந்த அவர்கள், துணிமணிக்குள் 58 நட்சத்திர ஆமைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட அந்த ஆமைகள், வனவிலங்கு மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்