சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் கடந்த ஆண்டு கையாண்ட சரக்குகளின் அளவு அதிகரித்து உள்ளது.
சிங்கப்பூர் வழியாக சரக்குகளை அனுப்புவதற்கான உலகளாவிய தேவை அதிகரித்ததும் செங்கடலில் நிலவும் இடையூறுகள் காரணமாக கப்பலுக்குப் பதில் விமானம் வழியாக சரக்குகளை அனுப்புவது அதிகரித்திருப்பதும் அதற்கு முக்கிய காரணங்கள்.
2024ஆம் ஆண்டு சாங்கி விமான நிலையம் 1.99 மில்லியன் டன் சரக்குகளை இறக்கி, ஏற்றி உள்ளது. அதற்கு முந்திய 2023ஆம் ஆண்டு கையாண்ட 1.74 மில்லியன் டன் சரக்குகளைக் காட்டிலும் அது 14.6 விழுக்காடு அதிகம்.
இந்த விவரங்களை சாங்கி விமானநிலையக் குழுமம் வியாழக்கிழமை (ஜனவரி 23) தெரிவித்தது.
சாங்கி விமான நிலைய சரக்குப் போக்குவரத்தின் முதல் ஐந்து இடங்களில் சீனா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஹாங்காங் மற்றும் இந்தியா உள்ளன.
உள்நாட்டில் மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதி மற்றும் மறுஏற்றுமதி மீண்டதைத் தொடர்ந்து சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான சரக்குப் போக்குவரத்தில் பெரிய முன்னேற்றம் காணப்பட்டதாக குழுமம் தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
மேலும், 2024ஆம் ஆண்டு சாங்கி விமானநிலைய சரக்குப் போக்குவரத்தில் புதிதாக இரு நகரங்கள் இணைந்தன. சீனாவின் ஹாய்காவ், ஜப்பானின் நாகோயா ஆகிய இரு நகரங்கள் அவை.
அத்துடன், புதிதாக இரு விமான நிறுவனங்கள் கடந்த ஆண்டு முதல் சாங்கி விமான நிலையத்தில் இருந்து சரக்குகளைக் கையாளத் தொடங்கின. ஷண்டோங் ஏர்லைன்ஸ், ஏர் இன்சியோன் ஆகியன அந்த நிறுவனங்கள்.
தொடர்புடைய செய்திகள்
சரக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறித்து குழுமத்தின் விமான நடுவம் மற்றும் சரக்கு மேம்பாட்டுப் பிரிவு துணைத் தலைவர் லிம் சிங் கியட் கருத்துத் தெரிவித்து உள்ளார்.
சீனாவுக்கான ஆகப் பெரிய ஏற்றுமதி வர்த்தகப் பங்காளியாக ஆசியான் உருவெடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், ஆசிய நாடுகளுக்கு உள்ளேயே நடைபெறும் வர்த்தகத்தில் இதற்கு மேலும் சாங்கி விமான நிலையம் வளர்ச்சியை எதிர்பார்ப்பதாகக் கூறினார்.