சாங்கி விமான நிலையத்தின் வழியாக இந்த ஆண்டின் (2025) மூன்றாம் காலாண்டில் ஏறக்குறைய 17.3 மில்லியன் பயணிகள் வந்துசென்றுள்ளனர். கடந்த ஆண்டின் அதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் பயணிகள் எண்ணிக்கை 3.1 விழுக்காடு கூடியுள்ளது.
ஜூலையில் கிட்டத்தட்ட 6 மில்லியன் பயணிகளும் ஆகஸ்ட்டில் 5.9 மில்லியன் பயணிகளும் செப்டம்பரில் 5.5 மில்லியன் பயணிகளும் சாங்கி விமான நிலையத்தின் வழியாக வந்துபோயினர். சாங்கி விமான நிலையக் குழுமம் புதன்கிழமை (அக்டோபர் 22) வெளியிட்ட அண்மைப் புள்ளிவிவரங்களில் அந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
மூன்றாம் காலாண்டில் இங்கு ஆக அதிக எண்ணிக்கையில் வந்துபோன நாட்டினரின் பட்டியலில் சீனாவுக்கு முதலிடம். இந்தோனீசியா, மலேசியா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகியவை அடுத்தடுத்த நிலைகளில் வந்ததாகக் குழுமம் குறிப்பிட்டது.
முதல் பத்துச் சந்தைகளில் ஆண்டு அடிப்படையில் சீனாவும் வியட்னாமும் வலுவான வளர்ச்சியைப் பதிவுசெய்தன. சீனாவைச் சேர்ந்த பயணிகளின் விகிதம் 9.7 விழுக்காடும் வியட்னாமியப் பயணிகளின் விகிதம் 11.3 விழுக்காடும் அதிகரித்தன.
நகரங்களின் அடிப்படையில் முதல் ஐந்து இடங்களில் கோலாலம்பூர், ஜகார்த்தா, பேங்காக், டென்பசார் (பாலி), ஷாங்காய் ஆகியவை வந்தன. சிங்கப்பூர்-ஜகார்த்தா பயணப்பாதை ஈரிலக்க வளர்ச்சியைக் கண்டது.
சாங்கி விமான நிலையத்திற்கு மூன்றாம் காலாண்டில் வந்துபோன விமானச்சேவைகளின் எண்ணிக்கை 91,600. ஒப்புநோக்கச் சென்ற ஆண்டின் அதே காலத்தில் அந்த எண்ணிக்கை 92,100ஆக இருந்தது.
ஜனவரியில் அப்போதைய போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட், இந்த ஆண்டில் சாங்கி விமான நிலையத்துக்கு வந்துசெல்லும் பயணிகளின் எண்ணிக்கை, பெருந்தொற்றுக் காலத்துக்கு முந்திய நிலையைவிட அதிகமாக இருக்கும் என்று அதிகாரிகள் எதிர்பார்ப்பதாகக் கூறியிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஆண்டில் சாங்கி விமான நிலையம் கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 67.7 மில்லியன். அது 2019ஆம் ஆண்டின் 68.3 மில்லியனைவிடச் சற்றுக் குறைவு.
இவ்வாண்டில் செப்டம்பர்வரை சாங்கி விமான நிலையத்திற்கு ஏறக்குறைய 52 மில்லியன் பயணிகள் வந்துபோயினர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அது கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் அதிகம்.
சாங்கி விமான நிலையத்தின் கட்டமைப்பும் தொடர்ந்து விரிவடைகிறது. புதிய விமானச்சேவைகளும் நகரங்களும் கட்டமைப்பில் இணைந்துள்ளன.

