சாங்கி விமான நிலையம் இவ்வாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை கிட்டத்தட்ட 17.5 மில்லியன் பயணிகளைக் கையாண்டுள்ளது. கடந்த ஆண்டு அதே காலகட்டத்தில் பதிவான பயணிகள் எண்ணிக்கையைவிட அது 5.9 விழுக்காடு அதிகம்.
கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு முன் 2019ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் பதிவான பயணிகள் எண்ணிக்கையைவிட அது 4 விழுக்காடு அதிகம்.
சாங்கி விமான நிலையக் குழுமம் ஜூலை 22ஆம் தேதி ஆக அண்மைய புள்ளிவிவரங்களை வெளியிட்டது.
ஏப்ரலில் மட்டும் சாங்கி விமான நிலையத்தை 5.78 மில்லியன் பயணிகள் கடந்துசென்றனர். மே மாதத்தில் பயணிகள் எண்ணிக்கை 5.82 மில்லியனாகவும் ஜூன் மாதத்தில் அது 5.88 மில்லியனாகவும் பதிவானது.
இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் சீனாவிலிருந்தே ஆக அதிகமான பயணிகள் விமான நிலையத்தைக் கடந்தனர்.
இந்தோனீசியா, மலேசியா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகியவை அடுத்தடுத்த நிலைகளில் இடம்பெற்றுள்ளன.
சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையில் பதிவான பயண எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில் 15.8 விழுக்காடு. இந்தோனீசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான போக்குவரத்து 12 விழுக்காடு கூடியது.
இவ்வாண்டு ஜனவரியில் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட், சாங்கி விமான நிலையத்திற்கு வந்துசெல்லும் பயணிகள் எண்ணிக்கை கிருமித்தொற்றுக்கு முன்பிருந்த அளவைத் தாண்டக்கூடும் என்று தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
சாங்கி விமான நிலையம் கடந்த ஆண்டு 67.7 மில்லியன் பயணிகளைக் கையாண்டது. 2019ஆம் ஆண்டு சாதனை அளவாக விமான நிலையம் கையாண்ட 68.3 மில்லியன் பயணிகளில் அது 99.1 விழுக்காடு எட்டியது.
விமான நிலையத்திற்கு வந்துசெல்லும் பயணிகள் எண்ணிக்கையில் தொடர்ந்து நல்ல முன்னேற்றத்தைக் காணமுடிவதாக சாங்கி விமான நிலையக் குழுமத்தின் ஆகாய நடுவம், சரக்கு மேம்பாட்டுப் பிரிவின் நிர்வாகத் துணைத் தலைவர் லிம் சிங் கியாட் கூறினார்.
இவ்வாண்டின் முதல் காலாண்டில் சாங்கி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட, தரையிறங்கிய விமானங்கள் எண்ணிக்கை 93,600.
கடந்த ஆண்டின் அதே காலகட்டத்துடன் ஒப்புநோக்க அது 4.9 விழுக்காடு அதிகம்.
இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் சாங்கி விமான நிலையம் ஆஸ்திரியாவில் உள்ள வியன்னா, மலேசியாவில் உள்ள கோத்தா பாரு, வியட்னாமில் உள்ள நா டிராங் ஆகிய நகரங்களுடன் புதிய இணைப்புகளை உருவாக்கியது.

