தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாங்கி விமான நிலையத்தில் சிற்றுந்து சேவைச் சோதனை தற்காலிக ரத்து

2 mins read
‘பிரீமியம் கேப்’ ஓட்டுநர்கள் கவலை தெரிவித்ததன் விளைவு
7644ca43-7c76-4962-bd33-dcb1295e9aa7
பிப்ரவரி 13ஆம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை ‘பிரீமியம் கேப்’ ஓட்டுநர்கள் சாங்கி விமான நிலையத்தின் காத்திருப்புப் பகுதியில் தங்கள் வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தனர். - படம்: ஷின் மின் நாளேடு

சாங்கி விமான நிலையக் குழுமம், அதிகமான பயணிகளைக் கொண்ட குழுவிற்காகச் சோதனை அடிப்படையில் வழங்கப்படும் புதிய சிற்றுந்து சேவையைத் தற்காலிகமாக ரத்து செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த அறிவிப்பு வரும் வரை அது ரத்து செய்யப்பட்டிருக்கும்.

பிப்ரவரி 13ஆம் தேதி ‘பிரீமியம் டாக்சி’ அல்லது ‘மேக்சி கேப்’ எனப்படும் மேம்பட்ட பயண அனுபவத்துக்கான டாக்சிகளின் ஓட்டுநர்கள் கவலை தெரிவித்தது இதற்குக் காரணம்.

சிற்றுந்துகளின் எண்ணிக்கை குறித்தோ ‘மேக்சி கேப்’ டாக்சிகளைவிடச் சிற்றுந்து சேவைக்கு முன்னுரிமை தருவது குறித்தோ எவ்விதமான ஒப்புதலும் அளிக்கப்படவில்லை என்று குழுமம் தெரிவித்தது.

பிப்ரவரி மாதத் தொடக்கத்திலிருந்தே விமான நிலையத்தின் தரைத்தளப் போக்குவரத்து சேவையகம் தங்களுக்குப் பயணிகளை ஒதுக்கீடு செய்யும் முறையில் மாற்றத்தை உணரத் தொடங்கியதாக ‘மேக்சி கேப்’ ஓட்டுநர்கள் இருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினர்.

இத்தகைய சேவை வழங்கும் டாக்சி ஓட்டுநர்கள் 170 பேரில் ஜெயமோகன் மோகனும் ஒருவர்.

73 வயதாகும் அவருக்கு வழக்கமாக அரை மணி முதல் ஒரு மணி நேரத்தில் வாடிக்கையாளர்களை ஏற்றிச் செல்ல வாய்ப்பு கிடைக்கும். ஆனால் சிற்றுந்து சேவை தொடங்கிய பிறகு காத்திருப்புப் பகுதியில் நான்கு அல்லது ஐந்து மணி நேரம் காத்திருக்க நேரிட்டதாக அவர் கூறினார்.

விமான நிலையத்தில் தரைத்தளப் போக்குவரத்து சேவையக நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்றுள்ள உட்லண்ட்ஸ் டிரான்ஸ்போர்ட் நிறுவனம், பெரிய குழுக்களாக வரும் பயணிகளுக்கு மட்டுமே சிற்றுந்துகள் சேவை வழங்கும் என்று முதலில் கூறியதாக அவர் சொன்னார்.

‘மேக்சி கேப்’ வாகனங்களில் ஏறக்கூடிய எண்ணிக்கைக்குமேல் பயணிகளைக் கொண்ட குழுக்கள் அல்லது மிக அதிகமாகப் பயணப் பெட்டிகளை வைத்திருக்கும் குழுக்களுக்கு மட்டுமே சிற்றுந்துகள் சேவை வழங்கும் என்று தங்களிடம் கூறப்பட்டதாக ஜெயமோகன் குறிப்பிட்டார்.

ஆனால் மூன்று முதல் ஆறு பயணிகளைக் கொண்ட குழுக்களும் சிற்றுந்துகளுக்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.

மேலும் வழக்கமாக விமான நிலையத்திலிருந்து ஒரு நாளில் ஆறு முதல் எட்டு முறை பயணிகளுக்கு சேவை வழங்கிவந்த தனக்கு ஓரிரு சேவை வாய்ப்புகள் மட்டுமே கிடைத்ததாகவும் ஜெயமோகன் கூறினார்.

பிப்ரவரி 13ஆம் தேதி, குழுமத்திடமும் இதர தரப்புகளிடமும் தங்கள் கவலைகளை இத்தகைய ஓட்டுநர்கள் தெரிவித்தனர். அதையடுத்து சிற்றுந்து சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்துக்குத் தீர்வுகாண தேசிய டாக்சிச் சங்கம் (NTA) உள்ளிட்ட தரப்புகளுடன் குழுமம் பேச்சு நடத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்