தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாங்கியில் பயணிகளுக்கும் விமான நிறுவனங்களுக்கும் கூடுதல் கட்டணம்

2 mins read
புதிய மேம்பாட்டுத் திட்டத்துக்கு $3 பில்லியன் நிதி தேவை
d11ef0ab-a5fc-4f09-a30e-00a864198e77
எரிசக்தி, மனிதவளம் போன்ற அம்சங்களில் அதிகரித்துவரும் செலவினங்களை ஈடுசெய்ய சாங்கி முற்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சாங்கி விமான நிலையத்தில் பயணிகளும் விமான நிறுவனங்களும் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு கூடுதல் கட்டணங்களும் தீர்வைகளும் செலுத்த வேண்டும்.

சாங்கி அதன் நான்கு முனையங்களிலும் $3 பில்லியன் மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டத்துக்கு நிதி திரட்டவும் எரிசக்தி, மனிதவளம் போன்ற அம்சங்களில் அதிகரித்துவரும் செலவினங்களை ஈடுசெய்யவும் முற்படுகிறது.

சாங்கியிலிருந்து புறப்படுவோர் அடுத்த ஈராண்டுகளுக்கு மொத்தம் $65.20 கட்டணத்தைத் தொடர்ந்து செலுத்துவர். ஆனால், 2027 ஏப்ரல் முதல் கட்டணம் கட்டங்கட்டமாக அதிகரிக்கும். 2030 ஏப்ரலில் இது 21 விழுக்காடு கூடி, $79.20ஆக உயரும்.

சாங்கி வழியாக இடைவழிப் பயணம் (transit) மேற்கொள்வோருக்கான கட்டணம், தற்போதைய $9லிருந்து 2030 ஏப்ரலில் $21ஆக கூடும்.

இதற்கிடையே, சாங்கியில் விமானங்களைத் தரையிறக்கி, இங்கு நிறுத்திவைக்கும் நிறுவனங்கள், 2030லிருந்து ஏறத்தாழ 40 விழுக்காடு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

ஏர்பஸ் ஏ320 போன்ற ஒடுக்கமான விமானங்களை சாங்கியில் தரையிறக்குதல், நிறுத்திவைத்தல், வான்பாலம் (aerobridge) ஆகியவற்றுக்கான கட்டணம் 2025 ஏப்ரல் முதல் ஒவ்வோர் ஆண்டும் உயரும். விமானம் தரையிறங்கும் ஒவ்வொரு தடவைக்கும் தற்போது $1,200ஆக உள்ள கட்டணம், 2030 ஏப்ரலில் $1,725ஆக ஏற்றம் காணும்.

ஏர்பஸ் ஏ350 போன்ற அகலமான விமானங்களுக்கான கட்டணம், தற்போதைய $3,600லிருந்து ஒவ்வோர் ஆண்டும் கூடி, ஆறு ஆண்டுகளில் $5,040ஐ எட்டும்.

கட்டண உயர்வையும் மேம்பாட்டுத் திட்டங்களையும் வியாழக்கிழமை (நவம்பர் 7) அறிவித்த சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமும் சாங்கி விமான நிலையக் குழுமமும், ஏற்கெனவே வழங்கப்படும் சேவைகளையும் உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றன. பயணப்பெட்டிகளைக் கையாளும் முறை, முனையங்கள் 1, 2, 3 ஆகியவற்றை இணைக்கும் ‘ஸ்கைட்ரெயின்’ உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.

திறக்கப்பட்டு 16 ஆண்டுகளான முனையம் 3ஐப் புதுப்பிக்கும் திட்டங்களும் உள்ளன. ஆனால், அவை இன்னும் திட்டமிடும் கட்டத்தில் உள்ளன.

2025 ஏப்ரல் முதல் நடப்புக்கு வரும் கட்டண உயர்வை நியாயப்படுத்திய சாங்கி விமான நிலையக் குழும மூத்த நிர்வாகிகள், அதிகரித்துவரும் தேவையைப் பூர்த்திசெய்ய விமான நிலையம் குறுகிய காலத்தில் ஆற்றலைக் கூட்ட வேண்டும் என்றனர்.

அடுத்த சில ஆண்டுகளில் மூன்றாவது ஓடுபாதை திறக்கப்பட்டவுடன், கூடுதல் விமானங்கள் சாங்கியிலிருந்து புறப்படவும் அங்கு தரையிறங்கவும் செய்யும். இதனால் இன்னும் அதிகமான பயணிகள் சாங்கி வழியாகச் செல்வர் எனச் செய்தியாளர்களிடம் நிர்வாகிகள் வியாழக்கிழமை கூறினர்.

எனவே, சாங்கியின் நான்கு முனையங்களும் 2030க்குள் ஆண்டுக்கு 90 மில்லியன் பயணிகளைக் கையாளும் கிட்டத்தட்ட முழு ஆற்றலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்