சாங்கி விமான நிலையத்துக்கான 2025ஆம் ஆண்டு நிலவரம் குறித்து அனைவரும் முணுமுணுப்பது, வளர்ச்சி என்ற சொல்.
கொவிட்-19 காலகட்டத்துக்கு முன் 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் பயணிகள் போக்குவரத்து எண்ணிக்கை 2024ல் முழு மீட்சிநிலை அடைவதைக் குறைந்த எண்ணிக்கையில் விமான நிலையம் தவறவிட்டது. 2019ல் அது கையாண்ட 68.3 மில்லியன் பயணிகள் எண்ணிக்கை, சற்றே குறைந்து 2024ல் 67.7 மில்லியனாகப் பதிவானது.
இந்நிலையில், விரிவடைந்துவரும் விமானப் போக்குவரத்துத் துறையின் ஆதாயத்தில் சாங்கி விமான நிலையம் கூடுதல் பங்கைத் தன்வசமாக்குவது சாத்தியம் என்று தொழில்துறை ஆய்வாளர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தனர்.
ஆசிய பசிபிக் வட்டாரத்தின் பொருளியல் மறுமலர்ச்சியுடன் புதிய விமான நிறுவனங்கள் மற்றும் பயணப் பாதைகளின் அறிமுகத்தால் இணைப்புத்தன்மை மேம்பட்டு சாங்கி விமான நிலையம் ஏற்றம் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி மாத நிலவரப்படி வாரந்தோறும் 100 விமான நிறுவனங்கள் 7,400க்கும் மேற்பட்ட விமானப் பயணங்களை சாங்கியில் இயக்கி வருகின்றன. இந்தப் பயணங்கள் சிங்கப்பூருக்கும் 49 நாடுகளிலுள்ள 163 நகரங்களுக்கும் இடையிலானவை.
கொவிட்-19 கொள்ளைநோய்க்கு முன்னதாக 2020ஆம் ஆண்டு ஜனவரியில் விமான நிலையத்தின் கட்டமைப்பின்கீழ் சிங்கப்பூருடன் 170க்கும் அதிக நகரங்கள் இணைக்கப்பட்டன. இதனுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு ஜனவரி அந்த எண்ணிக்கையை நெருங்கிவிட்டது.
இந்நிலையில், 2035ஆம் ஆண்டுக்குள் 200க்கும் மேற்பட்ட நகரங்களை சிங்கப்பூருடன் விமானப் பயணம்வழி இணைப்பதே தற்போதைய இலக்கு.
முன்னணி மையம் என்ற தகுதிக்கு மிரட்டல்
இருப்பினும், முன்னணி மையம் என சாங்கி விமான நிலையம் அடைந்துள்ள நிலைக்கு, மிரட்டல் விடுக்கும் வகையில் இடையூறுகள் இருக்கவே செய்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
தென்கிழக்காசியாவிலும் ஆசிய-பசிபிக்கிலும் பயணம், சுற்றுப்பயணம், விமானப் போக்குவரத்து ஆகியவை 2025ல் அதிக போட்டித்தன்மையுடன் இயங்கும் என்று பயண ஆய்வாளர் கேரி பாவர்மேன் கூறினார். நிதிநிலை, லாபம் குறித்து எச்சரிக்கை காக்க வேண்டிய நிலையும் பயணிகளை ஈர்ப்பது மும்முரமாகும் நிலையும் ஏற்படும் என்றார் அவர்.
மிதமான வளர்ச்சி
சாங்கி விமான நிலையம் 2025ல் 3 முதல் 5 விழுக்காடு வளர்ச்சி காணும் என்று தாம் எதிர்பார்ப்பதாக ‘ஓஏஜி ஏவியேஷன்’ நிறுவனத்தின் ஆசியப் பிரிவுத் தலைவர் திரு மயூர் பட்டேல் தெரிவித்தார்.
தென்கிழக்காசியாவில் வலுவான பயணத் தேவை, மலிவுக் கட்டண விமான நிறுவனங்களின் தொடர் விரிவாக்கம், விமானப் பயண ஆற்றலை முடுக்கிவிட இவ்வட்டாரத்தில் செய்யப்படும் முதலீடுகள் ஆகியவை இந்த வளர்ச்சிக்கு காரணங்களாக இருக்கும் என்று சுட்டினார் அவர். இருப்பினும் எதிர்பாராமல் ஏற்படக்கூடிய விநியோகத் தொடர் இடையூறுகள் தொடரலாம் என்றும் அவர் எச்சரித்தார்.
காத்திருக்கும் சவால்கள்
இந்நிலையில், குறுகியகால இலக்காக சாங்கி விமான நிலையம் தென்கிழக்காசியாவில் இணைப்புத்தன்மையை மீண்டும் மீட்டெடுப்பதில் முக்கியக் கவனம் செலுத்த வேண்டும் என்று சாங்கி விமான நிலையக் குழுமத்தில் ஆகாயவெளி மையம், சரக்கு மேம்பாட்டுப் பிரிவின் நிர்வாகத் துணைத் தலைவர் திரு லிம் சிங் கியாட் கூறினார்.
இதற்கிடையே, அதிகரிக்கவிருக்கும் செயல்பாட்டுச் செலவுகள் சாங்கி விமான நிலையத்தின் ஈர்ப்புத்தன்மையைப் பாதிக்கக்கூடும்.
“உலகின் இப்பகுதியில் சாங்கி ஆக பலம்வாய்ந்த மையமாக விளங்குகிறது. ஆனால், அந்நிலை எப்போதுமே நீடிக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை,” என்று கான்டாஸ் இன்டர்நேஷனல் தலைமை நிர்வாகி கேம் வால்லஸ் தெரிவித்தார். வட்டாரத்திலுள்ள மற்ற மையங்களுடன் ஒப்பிடுகையில் கட்டணத்தில் போட்டித்தன்மையை உறுதிசெய்வது வரும் ஆண்டுகளில் சாங்கிக்கு மிக முக்கியம் வாய்ந்ததாக இருக்கப் போவதாக அவர் சொன்னார்.
புத்தாக்கம், திறமை, அரசாங்கத்திற்கும் விமானப் போக்குவரத்துச் சமூகத்திற்கும் இடையே வலுவான ஒத்துழைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதால் மற்ற மையங்களிலிருந்து சிங்கப்பூர் தனித்து நிற்பதாக ஆல்டன் ஏவியேஷன் கன்சல்டன்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திருவாட்டி மேபல் குவான் சுட்டினார்.