2026ஆம் ஆண்டின் உலகின் தலைசிறந்த விமான நிலையமாக சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தைத் தேர்வு செய்துள்ளது ‘ஸ்கைடிராக்ஸ்’ ஆய்வு நிறுவனம்.
2025ஆம் ஆண்டிலும் உலகின் சிறந்த விமான நிலையங்களின் பட்டியலில் சாங்கி விமான நிலையம் முதலிடத்திற்குத் தேர்வாகி இருந்தது. அதற்கு முந்திய 2024ஆம் ஆண்டில் இரண்டாம் இடத்தில் அது இருந்தது.
விமான நிலையங்களைத் தேர்வு செய்து விருது அளிக்கும் நடைமுறை 2000ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் சாங்கி விமான நிலையம் 14 முறை முதலிடத்திற்கு வந்து சாதித்துள்ளது.
குறிப்பாக, 2013ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக சாங்கி விமான நிலையம் முதலிடத்திற்குத் தேர்வானது.
ஆசிய அளவிலும் முதலிடத்தைப் பெற்றுள்ளது சாங்கி விமான நிலையம்.
சாங்கி விமான நிலையத்திற்குள் உணவு ஏற்பாடுகளும் குடிநுழைவுச் சேவைகளும் உலக அளவில் சிறந்தவையாகத் தொடருகின்றன.
அவற்றுடன், 60 மில்லியன் முதல் 70 மில்லியன் வரையிலான பயணிகளைக் கையாளக்கூடிய ஆற்றலும் அதற்கு உண்டு.
2025ஆம் ஆண்டில் 69.98 மில்லியன் பயணிகளை சாங்கி விமான நிலையம் கையாண்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
லண்டனில் புதன்கிழமை (மார்ச் 18) நடைபெற்ற நிகழ்வில் முதலிடத்துக்கான விருதை சாங்கி விமான நிலையக் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி யாம் கும் வெங் பெற்றுக்கொண்டார்.
தென்கொரியாவின் இன்சியோன் அனைத்துலக விமான நிலையம் இரண்டாவது இடத்திற்கும் ஜப்பானின் தோக்கியோ ஹானெடா விமான நிலையம் மூன்றாவது இடத்திற்கும் தேர்வாயின.
நான்காம் இடத்திற்கு ஹாங்காங் அனைத்துலக விமான நிலையமும் ஐந்தாம் இடத்திற்கு ஜப்பானின் நாரிடா அனைத்துலக விமான நிலையமும் வந்துள்ளன.
2024ஆம் ஆண்டு இரண்டாம் இடத்திற்குத் தேர்வான கத்தாரின் ஹமாத் அனைத்துலக விமான நிலையம், இவ்வாண்டு மத்திய கிழக்கு வட்டாரத்தின் போர்ப்பதற்றம் காரணமாக அந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ‘கிரவுன் பிளாசா சாங்கி ஏர்போர்ட்’, உலகின் தலைசிறந்த விமான நிலைய ஹோட்டல் என்ற பட்டத்தைத் தட்டிச் சென்றதுடன் ஆசிய அளவிலும் முதலிடத்திற்குத் தேர்வாகி உள்ளது.
சாங்கி விமான நிலையம் முனையம் 3ல் உள்ள அந்த ஹோட்டல் தொடர்ந்து 11வது முறையாக சிறந்த இடத்திற்குத் தேர்வாகி உள்ளது.

