சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் கடந்த ஆண்டு 67.7 மில்லியன் பயணிகளைக் கையாண்டுள்ளது.
இது கொவிட்-19 பெருந்தொற்றுக்கு முந்திய 2019ஆம் ஆண்டின் எண்ணிக்கையில் 99.1 விழுக்காடு. பயணிகள் போக்குவரத்து சாங்கி விமான நிலையத்தில் கிட்டத்தட்ட முழுமையாக மீண்டுள்ளதை இது உணர்த்துகிறது.
மேலும், 2023ஆம் ஆண்டில் சிங்கப்பூர் வழியாக வந்து போன 58.9 மில்லியன் பயணிகளைக் காட்டிலும் இது 14.8 விழுக்காடு அதிகம் என்று சாங்கி விமான நிலையக் குழுமம் (CAG) புதன்கிழமை (ஜனவரி 22) தெரிவித்தது.
பெருந்தொற்று பரவுவதற்கு முன்னர், 2019ஆம் ஆண்டு சாங்கி விமான நிலையத்தை 68.3 மில்லியன் பயணிகள் கடந்தனர்.
இந்நிலையில், 2024ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் ஆக அதிகப் பயணிகள் வந்து சென்றதாக குழுமம் தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
அந்த ஒரு மாதத்தில் மட்டும் 6.41 மில்லியன் பயணிகள் சாங்கி விமான நிலையத்தின் வழியாக வந்து சென்றனர். இது 2019ஆம் ஆண்டின் பயணிகளின் எண்ணிக்கையைச் சமப்படுத்தி உள்ளது.
மேலும், 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு மாதத்தில் ஆறு மில்லியன் பயணிகளுக்கு மேல் வந்து சென்றது இதுவே முதல்முறை.
அதிலும் குறிப்பாக, 2024 டிசம்பர் 21ஆம் தேதி, அதாவது கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்திய சனிக்கிழமையில் மட்டும் சாங்கி விமான நிலையம் சாதனை அளவாக 226,000 பயணிகளைக் கையாண்டது.
தொடர்புடைய செய்திகள்
ஒட்டுமொத்தமாக, 2024ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் 17.8 மில்லியன் பேர் அந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தினர். 2023ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டின் பயணிகளைக் காட்டிலும் இது 10.7 விழுக்காடு அதிகம்.
குறிப்பாக, 2019ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் வந்து சென்ற அதே 17.8 மில்லியன் பயணிகளின் எண்ணிக்கை சென்ற ஆண்டின் இறுதிக் காலாண்டிலும் காணப்பட்டது. இது முழுமையான மீட்சியை உணர்த்துவதாகக் குழுமம் குறிப்பிட்டு உள்ளது.
பயணிகள் நிலவரம் இவ்வாறிருக்க, 2024 ஆண்டு முழுவதும் சாங்கி விமான நிலையத்திற்கு 366,000 விமானங்கள் வந்து சென்றன. இது 2023ஆம் ஆண்டில் வந்து சென்ற 328,000 விமானங்களைக் காட்டிலும் அதிகம்.
2019ஆம் ஆண்டில் 382,000 விமானங்கள் சாங்கி விமான நிலையத்திற்கு வந்து சென்றன.