தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாங்கி கட்டுமான விபத்து: சுவர் இடிந்து ஊழியர் மரணம்

2 mins read
43c525e9-dcb4-45c5-b053-26de8683ae00
சுவரில் ஏற்பட்டுள்ள விரிசல். காவல்துறை அச்சுவரைச் சுற்றி தடுப்புகளை வைத்துள்ளது. - படம்: சாவ்பாவ்
multi-img1 of 2

அப்பர் சாங்கியில் உள்ள ஒரு கட்டுமானப் பணியிடத்தில் புதன்கிழமை (செப்டம்பர் 17) சுவர் சரிந்து விழுந்தது. அதனுள் சிக்கிக்கொண்ட 52 வயது ஊழியர் சம்பவ இடத்திலேயே மாண்டார்.

சிங்கப்பூர் குடியுரிமைத் தற்காப்புப் படையும் (எஸ்சிடிஎஃப்) காவல் துறையும் 14, தோ குளோஸ் என்ற முகவரியில் உள்ள கட்டுமானப் பணியிடத்தில் நடந்த விபத்து குறித்த தகவல் பகல் 1.05 மணிக்கு கிடைத்ததாகத் தெரிவித்தன.

குடிமைத் தற்காப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்து, சுவருக்கு இடையே சிக்கிக்கொண்ட ஊழியரை, மீட்பு உபகரணச் சாதனங்களைக் கொண்டு வெளியேற்றினர். ஆனால் அவர் மரணம் அடைந்துவிட்டார் என்று மருத்துவ உதவியாளர்கள் உறுதிசெய்தனர்.

சந்தேகத்துக்குரிய குற்றச்செயல் ஏதும் இடம்பெறவில்லை என்று கூறிய காவல்துறையின் விசாரணை தொடர்கிறது. மே மாதம் தொடங்கிய அந்தக் கட்டுமானம் இரண்டு மாடி தனியார் வீட்டுக்குரியது என்று அதன் அருகில் ஒட்டப்பட்ட அறிவிப்பு தெரிவிக்கிறது.

மரணம் அடைந்த ஊழியர், இடிந்த சுவருக்கு அருகே ஒரு குழியைத் தோண்டிக்கொண்டிருந்தபோது அது சரிந்து விழுந்ததாக மனிதவள அமைச்சின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்தபோது கூறினார். குழியின் ஆழம் 60 சென்டிமீட்டர் என்று அறியப்படுகிறது.

பொதுவான பாதுகாப்பு நடவடிக்கையாக, அனைத்து கட்டுமானக் குத்தகையாளர்களும், பணி மேற்கொள்ளும் இடத்துக்கு அருகே உள்ள அனைத்துக் கட்டடங்களையும் சோதித்து, அவை பாதிப்படைந்து சரியாமல் போதிய அரண்கள் இருப்பதை உறுதிசெய்யவேண்டும் என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது.

.கட்டடக் கட்டுமான ஆணையம் (BCA) மேற்கொண்ட சோதனைகளில், அருகில் உள்ள கட்டடங்களுக்கு எவ்வித அபாயமும் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. கட்டுமானப் பணியிடத்தில் அனைத்து வேலைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்