ஆசிய பசிபிக் வட்டாரத்தில் உள்ள முன்னணி விமான நிலையங்களுடனான போட்டியில் தொடர்ந்து இடம்பெற சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாம் முனையெத்துக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படவேண்டும் என்று உலக விமான நிலைய அமைப்பு ஒன்றின் வட்டாரத் தலைவர் கூறியுள்ளார்.
உலகின் ஆகச் சிறந்த விமான நிலையம் என்ற இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள சிங்கப்பூர் இனியும் காத்திருக்கக்கூடாது என்று அனைத்துலக விமான நிலையங்கள் மன்றத்தின் (Airports Council International) ஆசிய பசிபிக், மத்திய கிழக்கு வட்டாரங்களுக்கான தலைமை இயக்குநர் ஸ்டெஃபானோ பரோஞ்சி குறிப்பிட்டுள்ளார். வட்டார அளவில் விமானத்துறையின் நிலை குறித்து அவர் செவ்வாய்க்கிழமை (மே 13) ஜூவல் சாங்கி கடைத்தொகுதியில் செய்தியாளர்களிடம் பேசினார்.
சிங்கப்பூருக்குப் பயணிகள் வருவதை ஊக்குவிக்கவும் கூடுதல் இடங்களுக்கு விமானச் சேவைகளை வழங்கவும் சாங்கி, தொடர்ந்து உயர்தர சேவை வழங்கி அரசாங்கத்துடனும் மற்ற தரப்பினருடனும் ஒத்துழைக்கவேண்டும்; அவ்வாறே ஐந்தாம் முனையம் போட்டியில் முன்னணி வகிக்க முடியும் என்று தாய்லாந்துத் தலைநகர் பெங்காக்கில் செயல்படும் திரு பரோஞ்சி சுட்டினார்.
அனைத்துலக விமான நிலையங்கள் மன்றத்தின் ஆசிய பசிபிக், மத்திய கிழக்கு வட்டாரப் பிரிவுகளில் 127 உறுப்பு விமான நிலையங்கள் உள்ளன. அவை 604 விமான நிலையங்களை இயக்குகின்றன.