சிங்கப்பூர்க் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வேலைக்குச் செல்லும் பெற்றோர்க்கு ஆதரவளிக்கும் வகையில் பணியிட மனப்போக்கையும் நடைமுறைகளையும் மாற்றுவதே சிங்கப்பூரை மேலும் குடும்பங்களுக்கு உகந்த நாடாக மாற்றுவதற்கான முதன்மைப் படியாக இருக்கும் என்று பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா கூறியுள்ளார்.
தேசிய தினப் பேரணி உரையில் பிரதமர் லாரன்ஸ் வோங் பெற்றோர்க்கான பல்வேறு ஆதரவுத் திட்டங்களை அறிவித்த மறுநாளான திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24), சிஎன்ஏ ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் குமாரி இந்திராணி இதனைக் கூறினார்.
அரசாங்கம் அறிவித்துள்ள புதிய திட்டங்கள் நிதி, வீடமைப்பு, பராமரிப்பு குறித்த கவலைகளை நிவர்த்தி செய்கின்றன. அதே வேளையில் சிங்கப்பூரர்கள் தங்களின் வாழ்க்கைத்தொழிலைப் தியாகம் செய்யாமல் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பணியிட நடைமுறைகளை எவ்வாறு மாற்றலாம் என்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக குமாரி இந்திராணி கூறினார்.
நிதி வளங்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளன. ஆனால், மக்களின் மனப்போக்கை மாற்றுவதே பெரும் சவால் என்று திருமணம், குழந்தைப்பேறு விவகாரங்களை மேற்பார்வையிடும் தேசிய மக்கள்தொகை, திறனாளர் பிரிவுத் தலைவருமான குமாரி இந்திராணி குறிப்பிட்டார்.
திருமணம், குழந்தைப்பேறு மறுஆய்வுப் பணிக்குழு மேற்கொள்ளும் விரிவான ஆய்வின் முதற்கட்டமே பிரதமர் வோங் அறிவித்த நடவடிக்கைகள் என்றார் குமாரி இந்திராணி. இந்த பணிக்குழுவின் முழு அறிக்கை 2027 தொடக்கத்தில் வெளியிடப்படும்.
குழந்தைப் பராமரிப்பு விடுப்பு அதிகரிப்பு, பாலர் பள்ளிக் கட்டணக் குறைப்பு, பிள்ளைகளின் வளர்ச்சிக்கேற்ப குடும்பங்களுக்குக் கூடுதல் நிதியுதவி உள்ளிட்டவை இதில் அடங்கும்.
இந்த நடவடிக்கைகள், சிங்கப்பூரர்களுக்கு திருமணம், குழந்தைப்பேறு பயணத்தில் அதிக நம்பிக்கையையும் உறுதியையும் வழங்கும் நோக்கம் கொண்டவை என்று அவர் சொன்னார்.
முன்னதாக, குழந்தை பிறக்கும் தருணத்தில் மட்டுமே அதிக வளங்களும் திட்டங்களும் குவிக்கப்பட்டிருந்தன. ஆனால், தற்போது நீண்டகால அடிப்படையில் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதைக் குமாரி இந்திராணி சுட்டினார்.
பிள்ளைகள் வளரும்போது அவர்களின் தேவைகளும் மாறுபடுகின்றன. எனவே, பெற்றோரின் இந்த நீண்ட பயணத்தில் அரசாங்கம் உடனிருக்கும் என்பதை உணர்த்தவே இத்திட்டங்கள் அமைவதாக அவர் குறிப்பிட்டார்.


