பிறந்து ஐந்து மாதம் ஆன தனது ஆண் குழந்தையைத் தொடர்ச்சியாக உலுக்கியச் சந்தேகத்தின்பேரில், 29 வயது ஆடவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குழந்தையின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள நீதிமன்றத் தடை உத்தரவு காரணமாக, அந்த ஆடவரின் பெயர் வெளியிடப்படவில்லை.
அவர் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
கடந்த 2024ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி பிற்பகல் 12.30 மணியளவில், ஹவ்காங் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றில் அவர் அக்குற்றத்தைப் புரிந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அவர் அக்குற்றத்தைப் புரிந்ததற்கான காரணத்தை நீதிமன்ற ஆவணங்கள் வெளிப்படுத்தவில்லை. குழந்தையின் தற்போதைய நிலை குறித்த விவரங்களும் அதில் குறிப்பிடப்படவில்லை.
அந்த ஆடவரின் வழக்கு ஜூலை 27ஆம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரும். குழந்தையைத் துன்புறுத்தும் குற்றத்திற்காக, ஒருவருக்கு எட்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, $8,000 வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

