காவல்துறை அதிகாரிகளை அவமதிக்கும் வகையில் தகாத வார்த்தைகளால் திட்டி எச்சில் துப்பிய ஆடவர்மீது திங்கட்கிழமை (ஜூலை 6) குற்றஞ்சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு ஊழியர் ஒருவர் தனது கடமையைச் செய்வதைத் தடுக்கும் வகையில் பலப்பிரயோகத்தில் ஈடுபட்டதாக அந்த 43 வயது நபர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று ஜூலை 5ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் காவல்துறை தெரிவித்தது.
கடந்த ஜூலை 3ஆம் தேதி ஈசூனில் தீயணைப்புப் பணியின்போது, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
அன்று மாலை சுமார் 5 மணியளவில், ஈசூன் ரிங் ரோடு புளோக் 381சியின் 12வது மாடியில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து 25 குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அத்துடன், ஒரு குழந்தை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் அதிகாரிகள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றபோது, அங்கு வந்த அந்த நபர் அதிகாரிகளை நோக்கி ஆபாச வார்த்தைகளை பேசியதோடு, சத்தம்போட்டு ரகளையில் ஈடுபட்டார்.
இதனால் காவல்துறையினர் தங்களது கடமையைச் சரிவரச் செய்ய முடியாமல் போனது.
“அதிகாரிகள், அந்த நபரை அமைதிப்படுத்த முயற்சி செய்தும், அவர் தனது செயலை நிறுத்தாமல் அதிகாரி ஒருவர் மீது காறி உமிழ்ந்தார்,” என்று காவல்துறை குறிப்பிட்டது.
‘சிங்கப்பூர் இன்சிடெண்ட்ஸ்’ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட ஒரு காணொளியில், சிவப்பு நிற கையில்லாத சட்டையும் கறுப்பு நிற காற்சட்டையும் அணிந்திருந்த அந்த நபர், புளோக்கின் கீழ்தளத்தில் நின்றுகொண்டு காவல் அதிகாரிகளை வம்புக்கு இழுப்பதைக் காண முடிகிறது.
காவல்துறையினர் தன்னை ஒன்றும் செய்ய முடியாது, கைது செய்ய முடியாது என்று சத்தமிடும் அவர், கேலி செய்யும் வகையில் தனது கைகளை நீட்டி, கைவிலங்கிடுமாறு அதிகாரிகளுக்கு சவால் விடுப்பதும் அதில் கேட்கிறது.
இந்தச் சம்பவத்தின்போது அந்த நபருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டதாகக் கூறப்படுகிறது. அன்று இரவு சுமார் 7.25 மணியளவில் உதவி கோரி வந்த அழைப்பைத் தொடர்ந்து ஒருவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த நபருக்கு நான்கு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

