சிங்கப்பூரில் காஸா போர் தொடர்பில் அனுமதி பெறாத நிகழ்ச்சிகளில் பங்கேற்றதற்காகப் பொது ஒழுங்குச் சட்டத்தின்கீழ் ஆறு பெண்கள்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இஸ்தானாவைச் சுற்றியுள்ள பகுதியிலும் நியூ ஃபீனிக்ஸ் பார்க்கில் உள்ள உள்துறை அமைச்சின் கட்டடத்திற்கு மிக அருகில் உள்ள இடத்திலும் பேரணி நடத்திய குற்றச்சாட்டுகளையும் புதன்கிழமை (செப்டம்பர் 9) பெண்கள்மீது சுமத்தப்பட்டது.
கியால் சின் லின் நாயிங், 22, அமிரா மொக்லிஸ், 33 ஆகியோர்மீது ஒரு குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டது. டயானா நூர் முகம்மது, 36, நுருல் அஃபிகா காமெல், 33 ஆகியோர்மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
நூர் சப்ரினா காமெல், 32 என்ற பெண்மீது பொது ஒழுங்குச் சட்டத்தின்கீழ் ஒரு குற்றச்சாட்டும் துன்புறுத்தல் தொடர்பில் ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டன.
ஆறாவது நபரான இலாய்ஜா டேமீது மொத்தம் ஒன்பது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அரசாங்க அதிகாரியின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல மறுத்தது, வெவ்வேறு இனக்குழுக்கள் இடையிலான இணக்கத்துக்குப் பாதகம் ஏற்படக்கூடும் என்று தெரிந்தே நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டது ஆகிய குற்றச்சாட்டுகளை அந்த 24 வயதுப் பெண் எதிர்கொள்கிறார்.
கியால் சின் லின் நாயிங் என்ற பெண்ணைத் தவிர பிற பெண்கள் அனைவரும் சிங்கப்பூரர்கள். கியால் சிங்கப்பூர் நிரந்தரவாசியான மியன்மார் நாட்டவர்.
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக அனுமதி பெறாமல் பேரணி நடத்தியது, மரினா அணைக்கட்டில் பட்டம் விடும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது, அரசாங்க அதிகாரியை நோக்கி முறைகேடான கைசைகையைக் காண்பித்தது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் பெண்கள் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.

