தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தகுதிநீக்க உத்தரவுக் காலத்தில் வாகனம் ஓட்டிய 8 பேர்மீது குற்றச்சாட்டு

2 mins read
409bb426-4612-4161-a898-308ec87daac9
அரசு நீதிமன்றம் - படம்: சாவ் பாவ்

தகுதிநீக்க உத்தரவின் கீழ் இருக்கும்போது வாகனம் ஓட்டியதாகக் குறைந்தது எட்டுப் பேர் மீ்து புதன்கிழமை (செப்டம்பர் 17) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. அவர்களில் 31 வயதுக்கும் 41 வயதுக்கும் இடைப்பட்ட மூவர் குற்றம் புரிந்தபோது பிடிபட்டனர்.

மார்ச் 3ஆம் தேதி கிராஞ்சி விரைவுச் சாலையில், வாகனம் ஓட்டத் தடை செய்யப்பட்ட காலத்தில் வாகனம் ஓட்டிய மதன் ராஜ் குனசேகரன், 31, பிடிபட்டார். உரிமம் இன்றி வாகனம் ஓட்டியது உள்பட நான்கு குற்றச்சாட்டுகள் புதன்கிழமை (செப்டம்பர் 17) அவர்மீது சுமத்தப்பட்டன.

கவனமின்றியும் அலட்சியமாகவும் வாகனம் ஓட்டியதற்காக மதன், 2024ல் அனைத்து விதமான வாகனமோட்டும் உரிமங்களையும் வைத்திருக்க 30 மாதங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

அவரது வழக்கு அக்டோபர் 23ஆம் தேதி விசாரணைக்கு வரும். உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்றாண்டுகள் வரை சிறை, $10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மீண்டும் குற்றம் புரிவோர் 6 ஆண்டுகள்வரை சிறை, $20,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். காலாவதியான சாலை வரியுடன் வாகனம் ஓட்டிய குற்றத்துக்குக் கூடுதலாக $2,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

தகுதிநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர், ஓட்டுநர் உரிமத்தை அளிக்கத் தவறியதற்காக மூன்று மாதங்கள்வரை சிறை, $1,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம், காப்பீடு இன்றி வாகனம் ஓட்டுவது கடுமையாக எடுத்துக்கொள்ளப்படும் என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இங் சின் சாய், 41, ஜூலை 28ஆம் தேதி ஹெண்டர்சன் ரோடு வழியாக காரில் சென்றுகொண்டிருந்தபோது, இருக்கை வார் அணியாமல் வாகனம் ஓட்டிச் சென்றதை அதிகாரி ஒருவர் கண்டதை அடுத்து அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.

ஜனவரி 27 முதல் 60 மாதங்களுக்கு அனைத்து வகை ஓட்டுநர் உரிமங்களையும் வைத்திருக்க அல்லது பெற இங்-கிற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. கவனமின்றி வாகனம் ஓட்டி கடுமையான காயம் ஏற்படுத்தியதற்காக 2024 நவம்பரில் நான்கு மாத சிறைத் தண்டனையும் அவருக்கு விதிக்கப்பட்டது.

தடைக் காலத்தில் வாகனம் ஓட்டியது, இருக்கை வார் அணியத் தவறியது, செல்லுபடியாகும் காப்பீட்டுத் தொகை இல்லாமல் வாகனம் ஓட்டியது ஆகிய குற்றச்சாட்டுகள் இங் மீது சுமத்தப்பட்டன. அவரது வழக்கு அக்டோபர் 13ல் நீதிமன்றத்துக்கு வரும்.

கேலாங் லோரோங் 35க்கு அருகே வேன் ஒன்றை ஓட்டி வந்த 32 வயது லியான் ஜுன் ஜீ மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. வாகனம் ஓட்டியபோது கைப்பேசியைப் பயன்படுத்தியதற்காக அவர் வாகனமோட்டத் தகுநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

குறிப்புச் சொற்கள்