கத்தியால் இருவரைக் காயப்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர்மீது குற்றச்சாட்டு

கத்தியால் இருவரைக் காயப்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர்மீது குற்றச்சாட்டு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

26 Oct 2026 - 7:14 pm

1 mins read

பிரின்செப் ஸ்திரீட்டில் ஆடவர்கள் இருவரைக் கத்தியால் காயப்படுத்திவிட்டுத் தப்பியோடியதாகக் கூறப்படும் 24 வயது நபர்மீது செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 27) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளது.

அக்டோபர் 25ஆம் தேதி காலை 7.50 மணி அளவில் உதவி கோரித் தங்களுக்கு அழைப்பு வந்ததாக அக்டோபர் 26ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் காவல்துறை தெரிவித்தது.

சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள், தலையின் பின்பகுதி, இடது முழங்கை, இடது மணிக்கட்டின் பக்கவாட்டில் வெட்டுக்காயங்களுடன் 36 வயது ஆடவர் ஒருவரைக் கண்டனர். அவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

மற்றொரு 25 வயது ஆடவரின் இடது முழங்கையிலும் வெட்டுக் காயம் ஏற்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

அந்தச் சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியதற்கு முன்பு, அவ்விருவரையும் கத்தியால் காயப்படுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர் அன்றைய தினமே அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டார். ஆபத்தான ஆயுதத்தைக் கொண்டு காயப்படுத்தியதாக அந்த ஆடவர்மீது குற்றஞ்சாட்டப்படும் எனக் கூறப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது இவற்றில் ஏதேனும் தண்டனைகள் சேர்த்து விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்