பாலஸ்தீன ஆதரவு பேரணியில் பங்கேற்ற பெண்கள்மீது குற்றச்சாட்டு

பாலஸ்தீன ஆதரவு பேரணியில் பங்கேற்ற பெண்கள்மீது குற்றச்சாட்டு

2 mins read
792faf60-de85-4194-85f2-f0147973e21d
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நடைபெற்ற பேரணிகளிலும் நிகழ்ச்சிகளிலும் பெண்கள் கலந்துகொண்டதாகக் காவல்துறை தெரிவித்தது. - படம்: பெரித்தா ஹரியான்
Google News Preferred Icon

சிங்கப்பூரில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக அனுமதி பெறாத பொதுக் கூட்டங்களில் பங்கேற்றதற்காகவும் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றதற்காகவும் ஆறு பெண்கள்மீது நீதிமன்றத்தில் புதன்கிழமை (செப்டம்பர் 9) குற்றஞ்சாட்டப்படவிருக்கிறது.

அந்தப் பெண்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நடைபெற்ற பேரணிகளிலும் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.

இஸ்தானா, அரசு நீதிமன்றங்கள் ஆகியவற்றில் இடம்பெற்ற அனுமதி பெறாத கூட்டங்களில் பெண்கள் கலந்துகொண்டதாகக் காவல்துறை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) அறிக்கை வெளியிட்டது. அவர்கள் 22க்கும் 36க்கும் இடைப்பட்ட வயதுடையவர்கள்.

2024ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி, இஸ்தானாவிற்கு வெளியே உள்ள தடைசெய்யப்பட்ட பகுதியில் அனுமதி வழங்கப்படாத பேரணி ஒன்றில் 33 வயதுப் பெண்ணும் 36 வயதுப் பெண்ணும் பங்கேற்றதாகக் கூறப்பட்டது.

பேரணியில் ஈடுபட்டோர் பாலஸ்தீன எதிர்ப்பையும் ஒற்றுமையையும் சித்திரிக்கும் வகையில் தற்பூசணிப் பழங்களின் படங்கள் கொண்ட குடைகளைச் சுமந்துசென்றனர்.

தடைசெய்யப்பட்ட பகுதியில் அனுமதி பெறாத பேரணியில் பங்கேற்ற குற்றச்சாட்டை ஆறு பெண்களில் ஒவ்வொருவரும் எதிர்கொள்வர் என்று கூறப்பட்டது.

இவ்வாண்டு ஏப்ரல் 30ஆம் தேதி பொதுப் பேரணிக்கு ஏற்பாடு செய்த மூவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

ஆக அண்மைய வழக்கில் இரண்டு பெண்களுடன் 32 வயதிலும் 33 வயதிலும் உள்ள மற்ற இரண்டு பெண்கள் இணைந்து 2024ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி, காஸா சண்டை தொடர்பில் மிகப் பெரிய அளவிலான பட்டம் விடும் நிகழ்ச்சியை மரினா அணைக்கட்டில் ஏற்பாடு செய்தனர்.

அனுமதியின்றி பொதுக் கூடுதலுக்கு ஏற்பாடு செய்த குற்றத்தை அந்த நான்கு பெண்களும் எதிர்நோக்குவர்.

32 வயதுப் பெண்மீது அரசாங்க ஊழியரிடம் தகாத விதத்தில் நடந்துகொண்ட குற்றச்சாட்டும் சுமத்தப்படும்.

குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளவிருக்கும் ஆறு பெண்களில் இருவர் சகோதரிகள் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

அவர்கள், கடந்த ஆண்டு மார்ச் 12ஆம் தேதி மக்களைச் சந்திக்கும் நிகழ்வின்போது சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகத்திடம் தகராறு செய்தவர்கள் என்று தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்
பாலஸ்தீனம்ஆதரவுபேரணிபெண்கள்குற்றச்சாட்டு