தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பணிப்பெண்ணைக் காயப்படுத்திய குற்றச்சாட்டிலிருந்து மூவர் விடுவிப்பு

2 mins read
ac011753-dff6-449b-a2f7-29e78a5011d5
2024ஆம் ஆண்டு குற்றஞ்சாட்டப்பட்ட மூவரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி விடுவிக்கப்பட்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பணிப்பெண்ணைக் காயப்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கிய மூவர், தண்டனையிலிருந்து தப்பியுள்ளனர்.

திரு ஆவேரி தாஹ்ரில் சாத்தேரியா, 27, திருவாட்டி ஏடென் லூவிஸ் நோர்மன், 31, திரு பிகிராஃப்ட் வாரன் ரசல், 61 ஆகிய மூவரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி விடுவிக்கப்பட்டனர்.

சட்டத்தின்கீழ் சில குற்றங்களுக்கு மட்டுமே நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வுகாணப்படுவதற்கு அனுமதி உண்டு. காயப்படுத்துதல், மானபங்கப்படுத்துதல் போன்றவை அவற்றுள் சில. குற்றச்சாட்டைக் கைவிடுவது என்பது இரு தரப்பும் இழப்பீட்டு உடன்பாட்டைச் செய்துகொள்வது. இழப்பீடு பொதுவாக ஒரு குறிப்பிட்ட தொகையாக இருக்கும் அல்லது மன்னிப்பாக இருக்கும்.

அதுபற்றிய மேல் விவரங்களைத் தலைமைச்சட்ட அதிகாரி அலுவலகம் வெளியிடவில்லை.

இருப்பினும் திரு ரசலுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகத் தலைமைச்சட்ட அதிகாரி அலுவலகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அப்பர் ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டிற்கு அருகே பே‌ஷோர் பார்க் கூட்டுரிமை வீடுகளில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் 2018ஆம் ஆண்டுக்கும் 2021க்கும் இடையில் மூவரும் குற்றங்களைப் புரிந்ததாகக் கூறப்பட்டிருந்தது. அவர்களுக்கு இடையிலான உறவு பற்றி நீதிமன்ற ஆவணங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.

2024ஆம் ஆண்டு மார்ச்சில், பணிப்பெண் திருவாட்டி சுகியாத்தியைத் தாக்கியதாகத் திரு சாத்தேரியா மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

பணிப்பெண்ணுக்குக் காயம் ஏற்படுத்தியதாகத் திருவாட்டி நோர்மன் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. திரு சாத்தேரியாவும் திருவாட்டி நோர்மனும் சிங்கப்பூரர்கள்.

அமெரிக்கரான திரு ரசல், திருவாட்டி சுகியாத்தியின் முதலாளி. பணிப்பெண்ணைத் தாக்கியதாக அவர் குற்றஞ்சாட்டப்படவில்லை. ஆயினும் பணிப்பெண்ணைத் துன்புறுத்துவதற்கு அவர் திருவாட்டி தஸ்லிமா சடாகா என்று அறியப்பட்ட ஒரு பெண்ணுக்கு அனுமதியளித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.

திருவாட்டி தஸ்லிமா மீது 2024ஆம் ஆண்டு மார்ச்சில் குற்றஞ்சாட்டப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்