செங்காங்கில் பேருந்தில் பயணம் செய்த ஆடவர் ஒருவரிடமிருந்து இஸ்ரேல் சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியைப் பறித்து, அவரைத் தாக்கியதாகக் கூறப்படும் இளையர்மீது வியாழக்கிழமை (ஜூன் 4) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது.
அந்த இளையர்மீது வேண்டுமென்றே காயம் விளைவித்த குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்று காவல்துறை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
2025 அக்டோபர் 27ஆம் தேதி இரவு 10.40 மணியளவில், ரிவர்வேல் டிரைவில் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து தனக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை குறிப்பிட்டது.
தமக்கு முன்பின் தெரியாத அந்த 55 வயது ஆடவர் அணிந்திருந்த இஸ்ரேல் சின்னமுடைய தொப்பியைப் பறித்து, அவரை அந்த 30 வயது இளையர் தாக்கியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இத்தாக்குதலில் காயமடைந்த அந்த ஆடவர் மருத்துவ சிகிச்சை பெற்றார். சம்பவ இடத்திற்கு அருகே இருந்த காவல்துறைக் கண்காணிப்புக் கருவி காட்சிகள், விசாரணையின் உதவியோடு சந்தேக நபரைக் காவல்துறையினர் பின்னர் அடையாளம் கண்டனர்.
இதற்கிடையே, பொது இடத்தில் வெளிநாட்டுத் தேசியச் சின்னத்தைக் காட்சிப்படுத்தியதற்காக அந்த ஆடவருக்குக் காவல்துறையினர் கடும் எச்சரிக்கை விடுத்தனர்.

