தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘சாட்ஜிபிடி’ ஒரு மணிநேர முடக்கத்தால் பயனர்கள் அவதி

3 mins read
46f82496-d4d9-4c03-a4c9-8113d94cba3f
வியாழக்கிழமை ஒரு மணி நேரத்திற்குமேல் சாட்ஜிபிடி முடங்கியதால் ஏராளமானோர் பாதிப்புக்குள்ளாகினர். - கோப்புப்படம்: ஊடகம்

ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப முறையான ‘சாட்ஜிபிடி’ (ChatGPT) வியாழக்கிழமை (12.12.2024) கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குச் செயலிழந்தது. உலகம் முழுவதும் ஏற்பட்ட இணையம் சார்ந்த தொழில்நுட்பச் செயலிழப்பையொட்டி ‘சாட்ஜிபிடி’யும் செயலிழந்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம், அதன் எக்ஸ் தளத்தில் வருத்தம் தெரிவித்திருந்தது. புதன்கிழமை பிற்பகல் 1.02 மணிக்கு ‘சாட்ஜிபிடி’, ‘ஏபிஐ’, ‘சோரா’ ஆகிய இணையம் சார்ந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பச் செயலிகள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் முடங்கியதாகவும், இப்போது மீண்டும் செயல்படத் தொடங்கியதாகவும் ஓப்பன்ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.

சோரா என்னும் செயலி, ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் காணொளித் தயாரிப்புச் செயலியாகும். அது எழுத்துகளைக் காணொளியாக மாற்றித்தரும் செயலியாகும். மேலும் படங்கள் மற்றும் நம்மிடமுள்ள காணொளி ஆகியவற்றுடன் புதிய காணொளி உருவாக்கும் சக்திவாய்ந்த செயலியாகும். இந்தச் செயலியை உலகம் முழுதும் பல்லாயிரக் கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ‘ஓப்பன்ஏஐ’ நிறுவனத்தின் நுண்ணறிவுச் செயலிகள் முடங்கியதால் ஏராளமான பயனர்கள் பாதிக்கப்பட்டனர். இந்தச் செயலியின் செயலிழப்புக் குறித்து சிங்கப்பூரில் இருந்து மட்டும் 150 புகார்கள் வந்தன. மேலும் அமெரிக்கப் பயனர்களிடம் இருந்து 28,478 புகார்கள் கிடைத்ததாக அந்த நிறுவனம் தெரிவித்தது.

அவ்வாறு கிடைக்கப்பெற்ற புகார்கள் அனைத்துக்கும் ‘ஓப்பன்ஏஐ’ நிறுவனம், “நுண்ணறிவுச் செயலிகளின் செயலிழக்கம் பற்றி அறிந்துள்ளோம். அதற்காக வருந்துகிறோம். இப்போது செயலிழக்கத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து விட்டோம். கோளாற்றைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். கோளாறு சரிசெய்யப்பட்ட பின் அதுகுறித்த விவரம் பயனர்களுக்குத் தெரிவிக்கப்படும் என்று காலை 8.15 மணிக்கு எக்ஸ் தளப் பதிவில் கூறியிருந்தது.

‘சாட்ஜிபிடி’யை நம்பியே வாழும் பயனர்கள் பலர், தங்களது வருத்தத்தையும் கோபத்தையும் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தினர். அவர்களில் அதிகமானோர் மாணவர்களே. தங்கள் பள்ளி ஒப்படைப்புகளைச் செய்து கொண்டிருந்தபோது ‘சாட்ஜிபிடி’ முடங்கி விட்டது என்று தங்கள் கோபம் கலந்த வருத்தத்தைப் பதிவு செய்தனர்.

ஒப்படைப்பை முடிப்பதற்கு ஒருநாளைக்கு முன்பே ‘சாட்ஜிபிடி’யை செயலிழக்க வைக்கத் திட்டமிட்டிருந்ததுபோல் உள்ளது என்று ஒரு பயனர் சமூக ஊடகப் பதிவில் தெரிவித்திருந்தார்.

இன்னொருவரின் எக்ஸ் பதிவில், “நீண்டகாலமாகவே $20 பணம் செலுத்திச் சந்தாதாரராகி இருக்கிறேன். நாளடைவில், சாட்ஜிபிடி $200 சந்தாத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதனால் தான் $20 சந்தாதாரராக நான் ‘சாட்ஜிபிடி’யைப் பயன்படுத்த முடியாதபடி ‘ஓப்பன்ஏஐ’ முடக்கியுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் கோபத்தை வெளிப்படுத்தக்கூடிய வகையில் பலரும் கருத்துகளைப் பதிவிட்டிருந்தாலும், ஒரு சிலர், நல்ல முறையில் கருத்துகளை வெளியிட்டிருந்தனர்.

சாட்ஜிபிடி முடங்கி விட்டது. எனவே, எல்லாரும் அவரவர் பள்ளி, கல்லூரி ஒப்படைப்புகளை இனி பழைய முறையிலேயே செய்து முடிக்க வேண்டும் என்று தெரிகிறது என்று ஒருவர் அமைதியான முறையில் தனது கருத்தைப் பதிவுசெய்திருந்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் துவக்கப்பட்ட ‘சாட்ஜிபிடி’யில் இப்போது ஏறக்குறைய 200 மில்லியன் பயனர்கள் உள்ளனர் என்று கடந்த நவம்பர் மாதம் புளூம்பெர்க் செய்தி வெளியிட்டிருந்தது.

அதிவேக வளர்ச்சிகண்டு வரும் ‘சாட்ஜிபிடி’யின் வர்த்தக ரீதியிலான செயலியைக் கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி ஒரு மில்லியனுக்கு அதிகமான வர்த்தகச் சந்தா பெற்ற பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்