உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) ஏற்பட்ட பேரளவிலான தகவல் தொழில்நுட்பச் செயலிழப்பால், சாங்கி விமான நிலையத்தில் 10க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்களின் சேவைகளுக்காக பயணப்பெட்டிகளைப் பதிவுசெய்யும் (check-in) நடைமுறை கைமுறையாகக் கையாளப்பட்டது.
பாதிக்கப்பட்ட விமான நிறுவனங்களில் ஸ்கூட், ஜெட்ஸ்டார், ஏர்ஏஷியா, சீபு பசிபிக் ஏர் உள்ளிட்டவை அடங்கும்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு சாங்கி விமான நிலையக் குழுமம் வெளியிட்ட அறிக்கையில், நிலவரத்தை தான் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகக் கூறியது.
பயணிகளுக்கு விமான நிலைய தரைத்தள ஊழியர் உதவி வருவதாக குழுமம் தெரிவித்தது.
சமூக ஊடகப் பதிவுகளைப் பொறுத்தமட்டில், சாங்கி விமான நிலைய முனையம் 1ல் ஸ்கூட்டின் பயணப்பெட்டி பதிவு நடைமுறை வெள்ளிக்கிழமை பிற்பகல் செயலிழந்தது. தைப்பே மற்றும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையங்களிலும் ஸ்கூட்டின் செயல்முறைகள் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த ஸ்கூட், தனது விமானச் சேவை முன்பதிவு முறைக்கும் பயணப்பெட்டிகளைப் பதிவுசெய்யும் முறைக்கும் இடையூறு ஏற்பட்டதாகக் கூறியது. இதனால் சில விமானச் சேவைகளுக்குத் தாமதம் ஏற்பட்டது.
தனது இணையப்பக்கத்திலும் செயலியிலும் விமானச் சேவைகளுக்கு முன்பதிவு செய்வதில் வாடிக்கையாளர்கள் தாமதத்தை எதிர்நோக்கலாம் என்றும் ஸ்கூட் கூறியது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானச் சேவைகள் திட்டமிட்டபடி இயங்குகின்றன.
தொடர்புடைய செய்திகள்
தகவல் தொழில்நுட்பச் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட விமான நிறுவனங்களில் ஜெட்ஸ்டாரும் ஒன்று என அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அதேபோல, தொழில்நுட்பக் கோளாற்றால் பாதிக்கப்பட்ட செயல்முறைகளை தான் கைமுறையாகக் கையாள்வதாக சீபு பசிபிக் ஏர் தெரிவித்தது.
ஆஸ்திரேலியா, அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் பல நாடுகளில் உள்ள விமான நிலையங்களும் தொழில்நுட்பச் செயலிழப்பால் பாதிக்கப்பட்டன.