பீஷான் விளையாட்டரங்கில் புதன்கிழமை (ஏப்ரல் 30) நடைபெற்ற மக்கள் செயல் கட்சி பிரசாரக் கூட்ட மேடைக்குப் பின்னால் அமைக்கப்பட்டிருந்த திரையில் இடம்பெற்றிருந்த தமிழ் வாசகம் புரியாவண்ணம் (gibberish) அச்சிடப்பட்டு இருந்தமைக்காக போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.
பீஷான் - தோ பாயோ குழுத்தொகுதி மசெக அணியை வழிநடத்தும் திரு சீ, வியாழக்கிழமை பிற்பகலில் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், “பீஷான்- தோ பாயோ குழுத்தொகுதியின் சார்பிலும் மேரிமவுண்ட் தனித்தொகுதி சார்பிலும் நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். இது நடந்திருக்கக் கூடாது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பிரசாரக் கூட்ட மேடையின் பின்னிருந்த திரையில் தமிழில் இடம்பெற்ற வாசகத்தின் எழுத்துகள் புரியாவண்ணம் அச்சிடப்பட்டிருந்ததைக் காட்டும் படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன. அதுகுறித்து இணையவாசிகள் பலரும் மனக்குறைப்பட்டுக் கொண்டனர்.
“குழுத்தொகுதிக்கான தேர்தல் அறிக்கையில் தமிழில் எழுதப்பட்ட பகுதியைச் சரிபார்க்க தொண்டூழியர்களை ஏற்பாடு செய்திருந்தேன். ஆனால், பிரசாரக் கூட்டத் திரையில் இடம்பெற்றிருந்த வாசகங்கள் சரியாக அச்சிடப்பட்டுள்ளனவா என்பதைக் கவனிக்கத் தவறிவிட்டோம்,” என்று அமைச்சர் சீ விளக்கமளித்துள்ளார்.
அணித் தலைவர் என்ற முறையில் தாம் அதற்குப் பொறுப்பேற்பதாகக் கூறிய திரு சீ, அதற்காக வட்டாரவாசிகளிடமும் தமிழ்ச் சமூகத்தினரிடமும் மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்துக்கொண்டார்.
அவ்வாறு மீண்டும் நடக்காமல் பார்த்துக்கொள்ள நடைமுறைகள் சீராக்கப்படும் என்றும் அவர் அந்தப் பதிவு வழியாக உறுதியளித்துள்ளார்.