குழந்தை, கைக்குழந்தைப் பராமரிப்புக் கட்டணங்கள் கணிசமாகக் குறைகின்றன

குழந்தை, கைக்குழந்தைப் பராமரிப்புக் கட்டணங்கள் கணிசமாகக் குறைகின்றன

2 mins read
ffca14e2-a6ee-4ed4-9873-6d7c89e3fc6f
சிங்கப்பூர் அரசாங்கம் பாலர் பள்ளி கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்த முற்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரின் குடியுரிமை பெற்ற ஒவ்வொரு குழந்தையும் தரமான பாலர் கல்வியைப் பெற குழந்தைப் பராமரிப்பு கட்டணத்தையும் கைக்குழந்தைப் பராமரிப்புக் கட்டணத்தையும் அரசாங்கம் குறைப்பதாக அறிவித்துள்ளது.

“சிங்கப்பூரர்கள் இன்று கட்டுப்படியான விலையில் தொடக்கக் கல்வியைப் பெறுகின்றனர். குடும்ப வருமானம், பெற்றோர் இருவரும் வேலை செய்கின்றனரா போன்றவை ஒரு பொருட்டல்ல. தொடக்கநிலைக் கல்விக்கு வழங்கும் அதே ஆதரவை அரசாங்க ஆதரவு பெற்ற பாலர் பள்ளிகளுக்கும் நீட்டிக்கவிருக்கிறோம். அதற்கான நமது அணுகுமுறை மாற்றுகிறோம்,” என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறினார்.

அதன்படி, முழுநேர பிள்ளைப் பராமரிப்புக்கான மாதாந்தர கட்டணம் $150க்குக் குறைக்கப்படுகிறது. இதற்குமுன் அது $600ஆக இருந்தது.

அதேபோல கைக்குழந்தைப் பராமரிப்புக்கான மாதாந்தர கட்டணம் $300க்குக் குறைக்கப்படுகிறது. இதற்குமுன் அதற்கு $1,000க்கும் அதிகமாகச் செலுத்தவேண்டி இருந்தது.

“ஒரு குழந்தையின் வாழ்க்கையில் ஆரம்பகாலம் மிகவும் முக்கியமானவை. அவை, குழந்தைகள் எவ்வாறு கற்கிறார்கள், வளர்கிறார்கள், சிறந்து விளங்குகிறார்கள் என்பதைத் தீர்மானிக்கின்றன,” என்று திரு வோங் சுட்டினார்.

எனவேதான், கடந்த சில ஆண்டுகளில் பாலர் பள்ளி துறையைத் தொடர்ந்து விரிவுபடுத்தியுள்ளோம் என்ற அவர், விரிவான பாலர்கல்வி வழிகாட்டித், பங்காளித்துவ நிலையங்களும் கல்வியமைச்சு பாலர் பள்ளிகளும் இருப்பதாகச் சுட்டினார்.

பணிபுரியும் தாய்மார்கள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கம் ஏற்கனவே கணிசமான மானியங்களை வழங்கியுள்ளது.

அதன்மூலம் பாலர் பள்ளி கட்டணம் அவர்களுக்குக் கட்டுப்படியானதாக உள்ளது.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் தொடர்ந்து கூடுதல் மானியங்களைப் பெறுகின்றன.

குறைந்த கட்டணங்கள் இன்னும் பரவலாகக் கிடைக்கவேண்டும் என்பதை அரசாங்கம் விரும்புவதாகப் பிரதமர் வோங் கூறினார்.

எனவே, அரசாங்க ஆதரவு பெற்ற பாலர் பள்ளி நடத்துநர்களின் கட்டமைப்பை விரிவுபடுத்துவது அவசியம் என்றார் அவர்.

விருப்பமுள்ள நடத்துநர்கள் முன்வந்து அரசாங்கத்துடன் இணையும்படி திரு வோங் அழைப்புவிடுத்தார்.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்