மதுபானக் கூடங்களுக்கு செல்வதற்கு வயது வரம்பு இருப்பதுபோல், விரைவில் கைப்பேசிகளில் உள்ள செயலிகளை பதிவிறக்கம் செய்ய வயது வரம்பு விதிக்கப்படவுள்ளது.
இதன்படி, செயலிகளை நிர்வகிப்போர் அதை ஒருவர் பதிவிறக்கம் செய்யும் முன் அவருடைய வயது விவரம் தெரிவிக்கப்பட வேண்டும். இது வயது வந்தவர்கள் மட்டுமே பதிவிறக்கம் செய்யக்கூடிய செயலிகளிலிருந்து சிறுவர்களை பாதுகாக்கும் நோக்கம் கொண்டது.
எதிர்வரும் மார்ச் 31ஆம் தேதியிலிருந்து வயது வந்தவர்களுக்கு மட்டுமே ஆன செயலிகளை பதிவிறக்கம் செய்ய ஒருவர் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். இதுபோன்ற விதிமுறை அடங்கிய புதிய கட்டுப்பாடுகளை தகவல், தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம் வாழ்க்கை துணை, காதலர்களை அறிமுகம் செய்து வைக்கும் செயலிகள் (dating apps) அல்லது பாலியல் தகவல்கள் அடங்கிய செயலிகளை நிர்வகிக்கும் நிறுவனங்களுக்கு விதிக்க உள்ளது.
ஆணையம் விதிக்கும் கட்டுப்பாடுகளை செயலிகள் நிர்வகிக்கும் அமைப்புகள் ஓராண்டுக்குள், அதாவது 2026ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் தங்கள் செயலிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆணையம், செயலிகள் தொடர்பில் இணைய பாதுகாப்புக்காக அறிமுகப்படுத்த உள்ள புதிய நடைமுறைத் தொகுப்பின் மற்ற கட்டுப்பாடுகள் அனைத்தும் இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
அத்துடன், செயலிகளை நிர்வகிக்கும் அமைப்புகள் சமூக நெறிமுறைகளைக் கொண்டிருப்பதுடன் அவற்றை செயலி மேம்பாட்டாளர்கள் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், செயலி தொடர்பான விதிமீறல்கள் இருந்தால் அவற்றை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தப் புதிய கட்டுப்பாடுகள் ஆப்பிள், கூகல், ஹுவாவெய், சாம்சுங், மைக்ரோசாஃப்ட் ஆகிய செயலிகள், இணைய வலைப்பதிவுகளை நிர்வகிக்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.