தாஷாயனி சுகேந்திரன்
சிங்கப்பூரிலிருந்து ஆஸ்திரேலியா சென்று, அங்குள்ள பெர்த் நகரில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது மாதக் குழந்தை, தீபாவளிக்காக முதன்முறையாக இங்குள்ள குடும்பக் கொண்டாட்டங்களில் பங்கேற்றுள்ளது.
குடும்பத்தின் மூத்த குடிகளாக 93 வயதுக் கொள்ளுத் தாத்தா, கொள்ளுப் பாட்டி முதலிய நான்கு தலைமுறையினர் ஒரே கூரையின் கீழ் இவ்வாண்டு தீபாவளியைக் கொண்டாடியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் வசிக்கும் பன்னீர்செல்வம் குடும்பத்தினர், குழந்தை ஜான்வியின் முதல் தீபாவளிக்காகச் சிங்கப்பூர் வந்துள்ளனர்.
குடும்பப் பின்னணி
திரு பன்னீர்செல்வத்தின் இரட்டைப் பிள்ளைகளான மகள் வைஷ்ணவி, மகன் விக்னேஷ் ஆகியோர் உயர்கல்விக்காக முறையே 2016லும் 2018லும் பெர்த் நகருக்குச் சென்றனர். பின்னர், 2023 தொடக்கத்தில் பன்னீர்செல்வமும் அவரது மனைவியும் பிள்ளைகளுடன் ஆஸ்திரேலியாவிலேயே குடியேறினர்.
திருவாட்டி வைஷ்ணவி, பெர்த்தில் குஜராத்தி-கென்யப் பின்னணியில் ஆஸ்திரேலியாவில் வளர்ந்த ஜே (Jay) என்பவரைச் சந்தித்து, 2023இல் அவரையே திருமணம் செய்துகொண்டார். ஏறத்தாழ ஒன்பது மாதங்களுக்கு முன்னர் இந்த இணையருக்குப் பிறந்தவர்தான் குழந்தை ஜான்வி.
திரு விக்னேஷ், பெர்த்தில் தமது பல்கலைக்கழகப் படிப்பின்போது, மலேசியாவிலிருந்து 2018இல் பெர்த் நகருக்குக் குடிபெயர்ந்த கவிஷாவைச் சந்தித்துக் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குடும்பத்தினரோடு தீபாவளியைக் கொண்டாட இவர்கள் சிங்கப்பூருக்கு வந்து செல்வதைத் தங்களது வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.
இம்முறை, குழந்தை ஜான்வியின் முதல் பண்டிகையை இங்கிருக்கும் கொள்ளுத் தாத்தா, கொள்ளுப் பாட்டியுடன் இணைந்து கொண்டாடுவதற்காக அக்டோபர் 23 அன்று சிங்கப்பூருக்கு வந்திறங்கினர்.
அகமகிழ்ந்த பெரியவர்கள்
93 வயதான கொள்ளுத் தாத்தாவால் நீண்டதூரப் பயணம் செய்ய முடியாது என்பதால், அவருக்காகவும் கொள்ளுப் பாட்டிக்காகவும் ஆஸ்திரேலியாவிலிருந்து ஜான்வியுடன் தமது குடும்பத்தினர் சிங்கப்பூர் வந்துள்ளதாகப் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
“கொள்ளுத் தாத்தா, கொள்ளுப் பாட்டி, தாத்தா, பாட்டி, பெற்றோர், மாமா, அத்தை என நான்கு தலைமுறையினர் ஒரே இடத்தில் கூடித் தீபாவளி கொண்டாடுவதும், நால்வரும் இணைந்து நிழற்படம் எடுத்துக்கொண்டதும் எங்கள் குடும்பத்தின் மாபெரும் மைல்கல் நிகழ்வு,“ என்றார் அவர்.
திரு பன்னீர்செல்வத்தின் மாமியாரான கொள்ளுப் பாட்டி எல்லம்மாளும், தமது மடியில் தவழும் நான்காவது தலைமுறையைக் கண்டு பூரிப்படைந்தார்.
“நாலாவது தலைமுறையை என் கண்களால் பார்ப்பது எல்லையற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தையோடு நேரம் கழித்ததில் எனக்கு வேறு எந்த வேலையுமே செய்யத் தோன்றவில்லை,“ என்றார் திருவாட்டி எல்லம்மாள்.
கொள்ளுப் பாட்டி எல்லம்மாள் ராமசாமி கொள்ளுத் தாத்தா ரெங்கசாமி ஆகியோருடன் பாட்டி திருச்செல்வி ரெங்கசாமி (65 வயது), தாத்தா சுப்பன் பன்னீர்செல்வம் (69 வயது) மூத்த நிதி வணிகப் பங்காளரான தந்தை ஜே சவ்டா (35 வயது), பணியாளர் திட்டமிடலாளரான தாயார் வைஷ்ணவி பன்னீர்செல்வம் (30 வயது), மூத்த தணிக்கையாளரான மாமா விக்னேஸ்வரன் பன்னீர்செல்வம் (30 வயது) பராமரிப்பு ஒருங்கிணைப்பாளரான அத்தை கவிஷா கல்யாணசுந்தர் (30 வயது) ஆகியோர் பொங்கோல் வட்டாரத்தில் ஒரே கூரையின் கீழ் ஒன்று கூடித் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டடி மகிழ்ந்தனர்.
வெவ்வேறு பண்பாடுகளின் சங்கமம்
தமது மகளுக்கு இருவேறு கலாசாரங்களின் பின்புலம் அமைந்திருப்பது குறித்துத் தாய் வைஷ்ணவி பகிர்ந்துகொண்டார்.
“பெற்றோராக எங்கள் வழியாக வட இந்திய, தென்னிந்திய மரபுகள் இரண்டுமே என் பிள்ளையிடம் இணைகின்றன. தென்னிந்தியப் படையல், மருதாணி, முறுக்கு, அன்னாசிப் பழ ‘குவே’ (Kueh) பலகாரம் எனச் சிங்கப்பூர்த் தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகள் இந்தக் கொண்டாட்டத்தில் இடம்பெறுகின்றன,” என்று அவர் கூறினார்.
“சிறுவயதில் தாத்தா, பாட்டி, பெற்றோருடன் நான் அனுபவித்த பண்டிகை நினைவுகளை எனது மகளும் அனுபவிக்க வேண்டும் என விரும்புகிறேன். கொள்ளுத் தாத்தா, கொள்ளுப் பாட்டியுடன் நான்கு தலைமுறையினர் ஒரே கூரையின் கீழ் நிற்பதை நேரில் காண்பது வரம் என்றே கூறுவேன்,“ என்றார் வைஷ்ணவி.
மலேசியாவைப் பூர்விகமாகக் கொண்ட மருமகள் கவிஷாவுக்கும் இதுவே சிங்கப்பூரில் முதல் தீபாவளிக் கொண்டாட்டமாக அமைந்தது.
“மலேசியாவில் பட்டாசு வெடித்து ஆரவாரமாகக் கொண்டாடுவோம். சிங்கப்பூரில் சற்று அமைதியாக இருந்தாலும், இது முற்றிலும் புதிய அனுபவம். பெர்த்திலிருந்து புறப்பட்டு, இந்தியா சென்று புத்தாடைகள் வாங்கி, இங்கு வந்து குடும்பத்துடன் ஜான்வியின் முதல் தீபாவளியைக் கொண்டாடியது அனைவரையும் மேலும் நெருக்கமாக்கியுள்ளது,“ என்றார் திருவாட்டி கவிஷா.
குழந்தையைச் சுற்றியே சுழன்ற தீபாவளி
இந்த ஆண்டு குடும்பத்தின் வழக்கமான பண்டிகை நடைமுறைகள் ஜான்வியின் தேவைக்கு ஏற்பவே அமைந்தன.
“வழக்கமாக அதிகாலையில் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்போம்; ஆனால் இம்முறை குழந்தை எப்போது எழுகிறாள், எப்போது தயாராக இருக்கிறாள் என்பதைப் பொறுத்துச் சில மாற்றங்களை நாங்கள் செய்துள்ளோம்,” என்றார் தாத்தா பன்னீர்செல்வம்.
தொழில்நுட்பத்தின் மூலம் காணொளி அழைப்புகளில் பேச முடிந்தாலும், நேருக்கு நேர் அன்பைப் பரிமாறும் அனுபவத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை என்றனர் இக்குடும்பத்தினர்.
