இந்தோனீசியாவில் குழந்தைகளைக் கடத்தும் கும்பல் 2025ல் முறியடிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணைக்கு சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு தேவையான ஒத்துழைப்புகளை வழங்கி வருகிறது.
ஓராண்டுக்கு முன்பே 2024ல் குழந்தைகள் கடத்தப்படுவது குறித்து அமைச்சிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டில் லோட்டஸ் குழந்தை தத்தெடுப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான திருவாட்டி அலைஸ் காவேரியிடம் தொலைபேசியில் பேசிய ஒரு பெண், தன்னை பொந்தியனாக்கைச் சேர்ந்த முகவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.
தத்தெடுப்பதற்கு குழந்தைகளை இந்தோனீசியாவிலிருந்து விநியோகிக்க முடியும் என்றும் ஏற்கெனவே நான்கு குழந்தைகளை சிங்கப்பூரில் உள்ள தத்தெடுப்பு நிறுவனங்களுக்கு வழங்கியிருப்பதாகவும் அந்தப் பெண் கூறினார்.
அதனைப் புறக்கணித்த திருவாட்டி காவேரி, அதே நாளில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சிடம் புகாரளித்தார். இது பற்றி ஜனவரி 24ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் விவரம் கேட்டபோது, அமைச்சின் பேச்சாளர் ஒருவர், திருவாட்டி காவேரியிடமிருந்து பெற்ற புகாரை உறுதிசெய்தார்.
எனினும் பொதுவான தகவல்களை மதிப்பாய்வு செய்த பிறகு எந்தவொரு விண்ணப்பத்தையும் விசாரிப்பதற்கும் ரத்து செய்வதற்கும் முரண்பாடுகளோ சந்தேகங்களோ எழவில்லை என்று அந்தப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
2025 ஜூலையில் குழந்தை கடத்தல் கும்பலை இந்தோனீசிய அதிகாரிகள் முறியடித்த செய்தி வெளியானது. 2023ஆம் ஆண்டிலிருந்து 25 சிசுக்களை விற்க இந்தக் கும்பல் ஏற்பாடு செய்ததாகத் தெரிகிறது. 25ல் 15 சிசுக்கள் ஜகார்த்தா வழியாக சிங்கப்பூருக்குக் கொண்டு வரப்பட்டன.
இந்தக் கும்பலின் முக்கிய சந்தேக நபர் பொந்தியனாக்கைச் சேர்ந்த முகவர் என்று மேற்கு ஜாவாவின் சிறப்பு குற்றவியல் விசாரணைப் பிரிவின் இயக்குநர் அடி சாபாரி கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில் இந்தோனீசிய அதிகாரிகள் அளித்த தகவலால் இந்தோனீசியாவில் நடக்கும் விசாரணையில் தொடர்புடைய சம்பவங்களை அமைச்சினால் அடையாளம் காண முடிந்தது என்று பேச்சாளர் தெரிவித்தார்.
குற்றச்சாட்டுகளைப் பரிசீலிக்கவும் வழக்குகளை விரைவில் முடிக்கவும் குழந்தைகளின் நலனைக் கருதியும் இந்தோனீசியா அதிகாரிகளுடன் அமைச்சு இணைந்து செயல்பட்டு வருவதாக அந்தப் பேச்சாளர் சொன்னார்.
Mr T.N., Mr.P.T, Mrs E.G என்று குறிப்பிடப்படும் சிங்கப்பூரின் மூன்று தத்தெடுப்பு முகவர்களுக்கு கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்று நம்புவதாக மேற்கு ஜாவாவின் காவல்துறை பேச்சாளரான மூத்த ஆணையர் ஹென்ட்ரா ரோச்மவான் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் ஜனவரி 22ஆம் தேதி தெரிவித்தார்.
அவர்களுடைய முழுப் பெயர்கள், இந்தோனீசியாவில் கடத்தல் கும்பல் மீதான வழக்கு மார்ச்சில் தொடங்கும்போது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தோனீசிய அதிகாரிகள் இதுவரை நடத்திய விசாரணையில் பல்வேறு வகையில் பங்காற்றிய 26 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள், முகவர்களாகவும் குழந்தைப் பராமரிப்பாளராகவும் குழந்தைகளுக்குத் தாயாராகவும் செயல்பட்டுள்ளனர்.
கும்பல் உறுப்பினர்கள் சமூக ஊடகங்கள் வழியாக தத்தெடுக்க விரும்பும் பெற்றோரை அணுகி, 20 மில்லியன் ரூப்பியா (S$1,500) வரையிலான கட்டணத்தில் தங்களால் குழந்தைகளை வழங்க முடியும் என்று கூறியுள்ளனர்.
இந்தோனீசிய முகவர்கள் குழந்தைகளைக் காணொளி அழைப்பு மூலம் காட்டியும் இருக்கின்றனர்.
சில சிசுக்கள், கும்பலால் சிங்கப்பூருக்குக் கொண்டுவரப்பட்டன. சில குழந்தைகளை தத்தெடுக்கும் பெற்றோர் ஜகார்த்தாவில் பெற்றுக் கொண்டனர். இதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் பெற்றோர் கையெழுத்திட்டுள்ளது தெரிய வருகிறது.
சிங்கப்பூரின் தத்தெடுக்கும் பெற்றோர் ஒரு குழந்தைக்கு $20,000க்கும் அதிகமாகப் பணம் கொடுத்ததாக மேற்கு ஜாவா காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுவரை 15 குழந்தைகளில், ஒரு குழந்தை இந்தோனீசியாவிற்குத் திருப்பிக் கொண்டுவரப்பட்டது. 14 குழந்தைகள் இன்னமும் சிங்கப்பூரில் இருப்பதாக அறியப்படுகிறது.

