ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள் 2025 ஜனவரியிலிருந்து வாரத்தில் ஐந்து நாள் வேலை செய்யலாம். குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள் சனிக்கிழமைகளில் சேவை வழங்குவது அந்த ஆண்டிலிருந்து கட்டாயமாக இருக்காது.
ஆசிரியர்களின் பணி நிலையை மேம்படுத்தும் தொடர் முயற்சிகளில் இதுவும் ஒன்று என பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு புதன்கிழமை தெரிவித்தது.
தற்போது, சனிக்கிழமைகளில் குழந்தைப் பராமரிப்புச் சேவைக்கான தேவை குறைவாகவே உள்ளது.
எனவே, இந்தச் சேவைக்கு எந்தவொரு தேவையும் இல்லாத குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள், புதிய விதிமுறை நடப்புக்கு வருவதற்கு முன்னதாகவே 2024 ஜனவரி 1 முதல் சனிக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கலாம்.
ஒன்றுக்கு மேற்பட்ட நிலையங்களை நடத்துவோர், சனிக்கிழமை சேவைக்கான தேவையை ஒருங்கிணைத்து குறிப்பிட்ட சில நிலையங்களில் வழங்கலாம்.
புதிதாகச் சேரும் பிள்ளைகளுக்கு 2024 ஜனவரி 1 முதல் சனிக்கிழமைகளில் பராமரிப்புச் சேவை இருக்காதென்று பெற்றோருடனான சேவை ஒப்பந்தத்திலும் குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள் குறிப்பிடலாம்.
2024ல் புதிதாகத் திறக்கப்படும் குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள், சனிக்கிழமைகளில் சேவை வழங்க வேண்டியதில்லை.
இந்த மாற்றத்தால் பாதிக்கப்படும் மிகச்சில குடும்பங்கள் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்குப் படிப்படியான அமலாக்கம் துணைபுரியும் என்று பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு கூறியது.
தொடர்புடைய செய்திகள்
“வார இறுதியில் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடவும் ஓய்வெடுக்கவும் விரும்பும் ஆசிரியர்கள் சனிக்கிழமையும் வேலை செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்களுக்கு ஒரு பாரமாக இருக்கிறது,” என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஜுல்கிஃப்லி கூறினார்.
பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிபுணத்துவ மேம்பாட்டுத் திட்ட நியமன நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், ஆரம்பக்கல்வித் துறையில் ஆசிரியர்களைத் தக்க வைப்பதற்கும், அதிகமான சிங்கப்பூரர்களை ஈர்ப்பதற்கும் இந்த மாற்றம் உதவும் என்றும் குறிப்பிட்டார்.
பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு கடந்த 10 மாதங்களில் 8,000க்கும் மேற்பட்ட குடும்பங்களையும் சுமார் 800 குழந்தைப் பராமரிப்பு நிலையங்களையும் ஆய்வு செய்ததில், சனிக்கிழமை சேவை தேவையில்லை என்று 98 விழுக்காட்டுக் குடும்பங்கள் கூறின. பிள்ளைகளைத் தாங்களே பார்த்துக்கொள்ள முடியும் அல்லது மாற்று ஏற்பாடுகள் செய்ய முடியும் என்று அவை கூறின.
மிகைநேர வேலையால் அல்லது சனிக்கிழமை வேலை செய்வதால் குடும்பத்தோடு நேரம் செலவிடுவதும் ஓய்வெடுப்பதும் சிரமமாக இருப்பதாக ஆசிரியர்கள் கூறினர்.
மிகச்சில பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வதற்காக ஆசிரியர்களை சனிக்கிழமை வேலை செய்ய வைப்பது பயனற்றது என்று குழந்தைப் பராமரிப்பு நிலையங்களும் குறிப்பிட்டன.
என்டியுசி ஃபர்ஸ்ட் கேம்பஸ் நடத்தும் மை ஃபர்ஸ்ட் ஸ்கூலில் ஆங்கிலம் கற்பிக்கும் 27 வயது குமாரி போ காய் லின், சனிக்கிழமை சேவை நிறுத்தப்படுவதை வரவேற்றார்.
இரண்டு நாள் வார இறுதி விடுப்புடன் ஆசிரியர்கள் தங்கள் வேலைகளைச் செய்வதற்கும், பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதற்கும் நேரம் கிடைக்கும் என்று அவர் கூறினார்.
“பெற்றோரும் வார இறுதியில் குடும்பமாக ஒன்றுசேர்ந்து பிள்ளைகளுடன் தரமான நேரம் செலவிட இயலும்,” என்றார் அவர்.
பாசிர் ரிஸ் ஸ்திரீட் 12ல் உள்ள அவரது நிலையத்தில், சனிக்கிழமைகளில் வழக்கமாக ஒரே ஒரு பிள்ளை மட்டுமே இருப்பார்.
புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில், ஆரம்பக்கல்வித் துறைக்கான 2025 உருமாற்றத் திட்டத்தையும் திரு மசகோஸ் அறிமுகப்படுத்தினார்.
இத்திட்டம் வேலைகளிலும் திறன்களிலும் கவனம் செலுத்தும். பாலர் பள்ளி நடத்துநர்கள், ஆசிரியர்கள் போன்றவர்களுடன் சேர்ந்து புதுமையான, தரமான பாலர் பள்ளி சேவைகளை பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு உருவாக்கும்.
உற்பத்தித்திறனையும் சேவைத் தரத்தையும் மேம்படுத்த மின்னிலக்க உருமாற்றத்தையும் செயல்படுத்தும்.
ஆரம்பக்கல்வித் துறையை விரும்பத்தக்க பணியாக்க, சம்பளங்களும் உயர்த்தப்படும். இந்தத் துறையில் 2025 ஆண்டுக்குள் மேலும் குறைந்தது 2,500 பேர் வேலைக்குச் சேர இது தூண்டுகோலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


