சிறுவயதுத் துன்பம் இளவயதில் வேலை செய்யும்போது பாதிக்கக்கூடும்: ஆய்வு

சிறுவயதுத் துன்பம் இளவயதில் வேலை செய்யும்போது பாதிக்கக்கூடும்: ஆய்வு

2 mins read
e0132855-38e1-47e0-8a69-3096833794aa
ஆய்வில் பங்கேற்றவர்களில் 60 விழுக்காட்டினர் மூன்றுவிதத் துன்பங்களில் குறைந்தபட்சம் ஒன்றுக்கு ஆளானதாகக் கூறினர். - சித்திரிப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

தவறான முறையில் நடத்தப்படுவது போன்ற குழந்தைப்பருவ இன்னல்கள், மனநலத்தைப் பாதித்து, பிற்காலத்தில் இளையரானதும் அவர்களின் வேலையில் எதிர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.

குழந்தைப் பருவத்தில் துன்புறுத்தப்பட்டது, வீட்டில் போதைப்பொருள் பயன்படுத்தும் ஒருவருடன் தொடர்பில் இருந்தது, வறுமையைச் சந்தித்தது ஆகிய மூன்றுவிதத் துன்பங்கள் இளம் சிங்கப்பூர் பணியாளர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உள்ளதாக அது தெரிவித்துள்ளது.

அவ்வாறு பாதிக்கப்பட்டோர் தங்களது சுகாதாரநிலை குறைவாக உள்ளதென உணரக்கூடும்.

மோசமான வேலைப் பாதுகாப்பு உணர்வு, குறைந்த செயல்திறன், வருங்காலம் குறித்து குறைவான நம்பிக்கை ஆகியவற்றுக்கும் அவர்கள் சந்தித்த பாதிப்புகளுக்கும் தொடர்பு இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

சிறுவயதில் அனுபவித்த சிரமங்கள் வேலையிடத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை முதலாளிகளும் நிறுவனங்களும் அங்கீகரித்து, அதற்கான தீர்வுகளைக் காணவேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதை ஆய்வு சுட்டியதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இதுபோன்ற இளம்பருவ அனுபவங்கள் நிபுணத்துவச் சூழலிலுள்ள இளம் பணியாளர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையில் நிகழக்கூடியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் சாத்தியம் இருப்பதையும் ஆய்வு கண்டறிந்தது.

ஆய்வின் முடிவுகள் கடந்த மே மாதம் ‘டெய்லர் அண்ட் ஃபிரான்சிஸ் ஆன்லைன்’ சஞ்சிகையில் வெளியிடப்பட்டன.

கிரிஃபித் வர்த்தகக் கழகத்தின் இணைப் பேராசிரியர் கேரிஸ் சானுடன் இணைந்து சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் சமூகப் பணி மற்றும் சமூக சேவை ஆராய்ச்சி மையத் துறை அந்த ஆய்வை நடத்தியது.

மொத்தம் 1,229 தனிப்பட்டவர்களிடம் கருத்து கேட்கப்பட்டதில் அவர்களில் கிட்டத்தட்ட 60 விழுக்காட்டினர் குழந்தைப் பருவத்தில் மூன்றுவிதத் துன்பங்களில் குறைந்தபட்சம் ஒன்றுக்கு ஆளானதாகத் தெரிவித்தனர்.

15 விழுக்காட்டினர் இருவிதமான துன்பங்களை அனுபவித்ததாகவும் 4 விழுக்காட்டினர் மூன்றுவிதத் துன்பங்களையும் அனுபவித்ததாகவும் கூறினர்.

குறிப்புச் சொற்கள்
துன்புறுத்தல்குழந்தைஊழியர்கள்