லக்னோ: முதிய பெற்றோர் தங்களைப் புறக்கணிக்கும் பிள்ளைகளை வீட்டிலிருந்து வெளியேற்ற வகைசெய்யும் வகையில் விதிகளைத் திருத்த உத்தரப் பிரதேச மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
தங்களைப் பராமரிக்காமலும் மதிக்காமலும் இருக்கும் பிள்ளைகளைத் தங்கள் வீட்டிலிருந்து வெளியேற்ற முதிய பெற்றோரை அனுமதிக்கும் வகையில், ‘உத்தரப் பிரதேச பெற்றோர், முதியோர் பராமரிப்பு மற்றும் நல விதிகள்-2014’-ஐத் திருத்த முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.
புதன்கிழமை (ஆகஸ்ட் 26) நடைபெற்ற உத்தரப் பிரதேச அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணமில்லாத் தொலைபேசி எண்
புதிய விதிகளின்படி, வயதான பெற்றோரை ஏதேனும் ஒரு வகையில் துன்புறுத்தினால் அத்தகைய பிள்ளைகளை வீட்டிலிருந்து வெளியேற்ற முடியும். வயதான பெற்றோரால் நேரில் புகார் அளிக்க முடியாது என்பதால், இது குறித்துப் புகார் தெரிவிக்க, விரைவில் கட்டணமில்லாத் தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 நாள்களுக்குள் விசாரணை
இதன் தொடர்பில் மாவட்ட ஆட்சியாளரிடம் அளிக்கப்படும் புகார்கள்மீது 30 நாள்களுக்குள் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இது குறித்த மாதாந்தர அறிக்கையை ஆட்சியர்கள் மாநில அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
வயதான பெற்றோரின் உரிமைகளைப் பாதுகாத்து, அவர்களுக்கு மரியாதையான வாழ்க்கையை வழங்குவதோடு, குடும்பத்தினரிடையே அவர்களைப் பராமரிக்கும் பொறுப்புணர்வை அதிகரிப்பதே இந்தத் திருத்தத்தின் முக்கிய நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


