பிள்ளைகள் அதிக நேரம் திரைகளைப் பார்த்தால் முடிவெடுக்கும் திறன் மெதுவடையும்: சிங்கப்பூர் ஆய்வு

2 mins read
3549f651-a4b8-4b06-8198-036779332968
சிறுவயதில் கூடுதல் நேரம் திரையைப் பார்க்கும் பிள்ளைகள் முடிவெடுப்பதில் சிக்கலை எதிர்நோக்குவதாகக் கூறப்பட்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அழுது சத்தம் போடும் குழந்தைகளைச் சமாதானப்படுத்த மின்னணுச் சாதனங்களைப் பயன்படுத்த அனுமதிப்பது நல்ல யோசனையாக இருக்கலாம் என்று பெற்றோர் சிலர் எண்ணியிருக்கக்கூடும்.

திரையை அதிக நேரம் பார்க்கும் இரண்டு வயதுக்கும் குறைவான பிள்ளைகளின் முடிவெடுக்கும் திறன், பதின்மவயதினராகும்போது மெதுவடைவதாக அண்மையில் சிங்கப்பூர் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மூளை வளர்ச்சியில் மாற்றங்கள் தென்படுவதோடு பதின்ம வயதில் அதிகக் கவலையுடனும் அவர்கள் காணப்படுவதாகத் தெரியவந்துள்ளது.

இருப்பினும் மூன்று வயதிலிருந்து பிள்ளைகளுக்குப் பெற்றோர் புத்தகங்களை வாசித்துக் காட்டுவது நல்லது என்றும் ஆய்வு கூறுகிறது. அவ்வாறு செய்யும்போது குழந்தைகள் திரையைப் பயன்படுத்திய நேரத்திற்கும் மூளை வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றத்திற்கும் இடையில் உள்ள தொடர்பு, கணிசமான அளவு வலுவிழப்பதாகவும் ஆய்வில் தெரியவந்தது.

ஏ*ஸ்டார் அமைப்பின் மனித வளர்ச்சி, ஆற்றல் நிலையத்தில் முதன்மை ஆய்வாளராக இருக்கும் துணைப் பேராசிரியர் டான் ஐ பெங், புதிய ஆய்வை வழிநடத்துகிறார்.

மின்திரைகளைக் குழந்தைகள் பார்ப்பதற்கும் பெரியவர்களானதும் மூளையிலும் மனநலத்திலும் ஏற்படக்கூடிய நீண்டகால மாற்றங்களுக்கும் இடையில் உள்ள தொடர்பை ஆராயும் ஆகப்பெரிய ஆய்வு அது.

“குழந்தை பிறந்து, முதல் இரண்டு ஆண்டில் திரை நேரத்தைக் கட்டுப்படுத்த வேண்டியது ஏன் அவசியம் என்பதை உயிரியல் ரீதியாக ஆய்வு விளக்குகிறது. பெற்றோரின் ஈடுபாடு முக்கியம் என்பதையும் அது வலியுறுத்துகிறது.

பெற்றோரும் பிள்ளைகளும் ஒன்றாகச் சேர்ந்து வாசிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது உண்மையிலேயே ஒரு மாற்றத்தை உருவாக்கலாம் என்பதையும் ஆய்வு காட்டுகிறது,” என்று டாக்டர் டான் கூறினார்.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் அவர் மருத்துவ-ஆய்வாளராகவும் இருக்கிறார்.

ஆய்வு, 168 பிள்ளைகளின் வளர்ச்சியைப் பத்தாண்டுக்கும் மேல் கண்டறிந்தது. பல்வேறு கட்டங்களில் அவர்களின் மூளைகளை ஊடுருவி மருத்துவச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

குழந்தைகள், திரைகளைப் பார்ப்பதிலிருந்து பதின்ம வயதில் அவர்களின் மனநலம் வரை மாற்றங்கள் எவ்வாறு இருக்கின்றன என்பது அவற்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டன. அண்மைய ஆய்வுக் கட்டுரை, ‘இபயோமெடிசின்’ (eBioMedicine) எனும் மருத்துவச் சஞ்சிகையில் இடம்பெற்றுள்ளது.

குறிப்புச் சொற்கள்